காவல் துறையில், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், போலீசாருக்கு உதவிட, 1993ல், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' என்ற, 'காவல் துறை நண்பர்கள் குழு' ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில், வாலிபர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர். இவர்கள், போலீசாருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது, போக்கு வரத்தை சீர் செய்வது, குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கவும், பிடிக்கவும் உதவுவது என, பல்வேறு வகையில் உதவி கரமாக செயல்பட்டு வந்தனர். அதேநேரம், போலீசார், இவர்களை அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நிரந்தர கலைப்பு:
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், வியாபாரிகள், ஜெயராஜ், 63, அவரது மகன், பெனிக்ஸ், 31, ஆகியோர், ஜூன், 19ல், நீதிமன்ற காவலில்மர்மமான முறையில் இறந்தனர். போலீசார் கொடூரமாகத் தாக்கியதால், இருவரும் இறந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினருக்கும், தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.அதனால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை நிரந்தரமாக கலைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
மேலும், சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரிக்கும், சி.பி.சி.ஐ.டி., பிரிவு ஐ.ஜி., சங்கர், 'வியாபாரிகள் உயிரிழந்தது தொடர்பாக, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரும் விசாரிக்கப்படுவர்' என, தெரிவித்தார். இதையடுத்து, 'தமிழகம் முழுவதும், காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளுக்கு, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை பயன்படுத்தக் கூடாது' என, ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈடுபடுத்தக்கூடாது:
அதன் விபரம்: டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள் அனைவரும், தங்களுக்கு கீழ் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கு, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினரை, காவல் நிலையம் மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது; குற்றவாளிகளை பிடிக்கச்செல்லும் போது, அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது' என, உத்தரவிட வேண்டும். பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர், போலீஸ் போல செயல்பட, எந்த அதிகாரமும் கிடையாது. அவர்கள், 'பிளாஸ்டிக் பைப்' போன்ற பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு, அவர் உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுதும், 4,000க்கும் மேற்பட்ட, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர் உள்ளனர்.இவர்கள் மட்டுமல்லாமல் தன்னார்வலர்கள் பலரும், எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கிய, பிரண்ட்ஸ் ஆப் குழுவினரை நீக்க உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE