முடிவிற்கு வருமா இந்த, மூவஞ்சு, இரு தாயம், ஒரு பனிரெண்டு!| Despite lockdown, Tamil Nadu logs 4150 fresh coronavirus infections | Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

முடிவிற்கு வருமா இந்த, மூவஞ்சு, இரு தாயம், ஒரு பனிரெண்டு!

Updated : ஜூலை 06, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (9)
Share
'பாசிட்டிவ்' என்னும் வார்த்தையே, கெட்ட வார்த்தையாக, கேட்கக் கூடாத வார்த்தையாக மாறி விட்டது!தாயக்கட்டையை உருட்டி, விருத்தங்கள் கேட்டுக் கேட்டு, மனம் சலித்து விட்டது.'சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு, முழு ஊரடங்கு; 9ம் தேதியிலிருந்து பழைய ஊரடங்கு; அதன்பின் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு; இதர மாவட்டங்களுக்கு பொருந்தாது இந்த ஊரடங்கு' என்று,
coronavirus, covid 19, tamil nadu, lockdown, கொரோனா, பாதிப்பு, முருகராஜ்,

'பாசிட்டிவ்' என்னும் வார்த்தையே, கெட்ட வார்த்தையாக, கேட்கக் கூடாத வார்த்தையாக மாறி விட்டது!

தாயக்கட்டையை உருட்டி, விருத்தங்கள் கேட்டுக் கேட்டு, மனம் சலித்து விட்டது.'சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு, முழு ஊரடங்கு; 9ம் தேதியிலிருந்து பழைய ஊரடங்கு; அதன்பின் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு; இதர மாவட்டங்களுக்கு பொருந்தாது இந்த ஊரடங்கு' என்று, ஊரடங்கை கூறு போட்டதில், சாமி சத்தியமாக எதுவும் விளங்கவில்லை! இந்த உத்தரவு போடும் எஜமானர்களுக்காவது ஏதாவது புரியும் என்றால், எளிமைப்படுத்துங்கள், ப்ளீஸ்!

ஆரம்ப காலத்தில், காசிமேடு மற்றும் கோயம்பேடு பக்கம், மக்கள் கொஞ்சம் கூடுதலாக போனது உண்மை தான். அதன்பின், தொட்டு அழக் கூட தகுதியற்ற கொரோனா பிணமாக, துாக்கி வீசப்படுவோம் என்பதை, பயங்கர, 'பேக் கிரவுண்ட் மியூசிக்'குடன், 'டிவி'யில் பார்த்த பின், இப்போதெல்லாம், தெரு முனையில் இருக்கும் காய்கறி கடைப் பக்கம் கூட, அதிகம் போவதில்லை.

கடந்த, 100 நாட்களில், கொரோனா செய்தியைத் தவிர, வேறு எதையும் மக்கள் படிப்பதில்லை; பார்ப்பதில்லை; கேட்பதில்லை! 'முக கவசம் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்' என்றீர்கள்; வீட்டிற்குள்ளேயே முக கவசத்துடன் தான் நடமாடுகிறோம்!'சமூக இடைவெளி விட்டு நில்லுங்கள்; பழகுங்கள்; பேசுங்கள்' என்றீர்கள்; இடைவெளி அளவு அவ்வப்போது மாற்றி மாற்றி சொல்லப்படுவதால் குழப்பமடைந்து, இப்போது நிற்பதும் இல்லை; பழகுவதும் இல்லை; பேசுவதும் இல்லை!

'பஸ்சில், மண்டலத்திற்குள் போய்க் கொள்ளுங்கள்' என்றீர்கள்; சென்று வந்தபடி இருந்தோம்... 'இனி மண்டலம் எல்லாம் கிடையாது; மாவட்டத்திற்குள் மட்டும் தான் போகலாம்' என்றீர்கள்; 'சரி...' என்றோம். அதிலும் எல்லை பிரச்னை வந்ததால், 'இறங்கி நடங்கள்' என்றாலும், அப்படியே செய்கிறோம்; எட்டி உதைக்க, நாங்கள் என்ன முன்னாள் எம்.பி.,யா! ஒரு சினிமாவில், அப்பாவி திருடனான வடிவேல் மீது, துப்பு துலங்காமல் இருக்கும், கொலை, கொள்ளை, திருட்டு வழக்கு எல்லாத்தையும் சேர்த்து போடச் சொல்லி, காமெடி செய்வர்.

அது போல, நீங்கள் சொல்வதை எல்லாம் செய்யும் மக்கள் மீது, கொஞ்சமும் இரக்கம் இல்லாமல், 'கொரோனா பரவலுக்கு காரணமே, உங்கள் அலட்சியம் தான்' என்று பழியைப் போடுகிறீர்களே...எங்களில் பலரும், வைத்தியம் பார்க்க காசில்லாமல், தர்மாஸ்பத்திரிக்கு வழி கேட்டு வாசலுக்கு வந்தால், எங்கள் வீடு வரை நிற்கிறது கூட்டம், 'டெஸ்ட்' எடுக்க! 'மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்று அடிக்கடி சொல்வதற்கு முன்பாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் முதலில், சில விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள்...

ஆயிரம் ரூபாய் கொடுத்ததையே ஆயிரம் தரம் சொல்வதும், கோயம்பேடில் அலட்சியமாக நடந்து கொண்டதையும் காரணமாக சொல்லாதீர்கள்... கொரோனாவின் வாழ்வாதாரம், 14 நாட்கள் என்ற நிலையில், கோயம்பேடுக்கு பூட்டு போட்டு பல, 14 நாட்கள் ஓடி விட்டன!நிலைமை சரியாகும் வரை, சொந்த ஊருக்கு போய் நிம்மதியாக இருக்கிறோம் விடுங்கள் என்றால், அதுவும் விடமாட்டேன் என்கிறீர்கள்.சென்னையில் கட்டுமானத் துறையை சரி செய்ய நாங்கள் வருகிறோம் என, வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொன்னால், அதுவும் கூடாது என்கிறீர்கள். முறைப்படி அனுமதி பெற்று, பெற்ற தாயை பார்க்க போனாலும், தண்டோரா போட்டு மானத்தை வாங்கி விடுகிறீர்கள்.

'கடையை திறக்காமல் வியாபாரம் செய்; வேலைக்கு போகாமல் சம்பாதித்துக் கொள்; வாடகை கொடுக்காமல் வீட்டில் இருந்து கொள்; பூங்கா - கடற்கரைக்கு போகாமல் காற்று வாங்கிக் கொள்; ஆறுக்கு ஆறு சைஸ் வீட்டிற்குள், கால்களை அகலமாக வைத்து யோகா செய்; ரேஷனில் அரிசி வாங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவு சாப்பிடு' என்றெல்லாம் சொன்னால், நாங்கள் என்ன தான் செய்வது!சாம்பார் சாதத்திற்கே வழியில்லாத எங்களை, சத்தான உணவு சாப்பிடு என்றால், அது எப்படி என்று சொல்லுங்கய்யா, தெரிஞ்சுக்கிறோம்!

கடந்த, 25 நாட்களாக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவது இல்லை. பையில் காசு இல்லாததால், அவசியமானவை கூட இப்போது, அனாவசியமாகி விட்டன.இப்படி, 'கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் வரும் வரை காத்திருப்போம்' என, மக்கள் கட்டுப்பட்டு இருக்கும் நிலையில், ஒரே நாளில் உச்சம் தொட்ட தொற்று என்று, நித்தமும் தொற்று உச்சம் தொடுகிறது என்றால், அதற்கு மக்கள் காரணம் இல்லை; மண்டலத்திற்கு ஒரு அதிகாரி, ஒருங்கிணைக்க ஒரு அதிகாரி, சிறப்பு நுண்பிரிவு அதிகாரி மற்றும் அமைச்சர் குழு என, அதிகாரத்தை செலுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் உள்ளவர்கள் தானே காரணம் என்றாகிறது.


latest tamil news


'என்னிடம் வந்த, 599 கொரோனா நோயாளிகளையும் குணப்படுத்தி விட்டேன்; தற்போது சிகிச்சையில் உள்ள, 300 நோயாளிகளையும் குணப்படுத்தி விடுவேன். 'ஒருவர் கூட இந்த சித்த வைத்தியத்தில் இறக்க மாட்டார்கள்' என, தைரியமாக பேசும் சித்தா டாக்டர் வீரபாபு, தனக்கு ஒரு பெரிய ஆஸ்பத்திரி வளாகமும், பணியாட்களும் இருந்தால், இன்னமும் நிறைய பேருக்கு சிகிச்சை தருவேன்' என்கிறார். கண் முன்னே ஒருவர், 'ரிசல்ட்' காட்டுகிறார்; இவரது கோரிக்கை ஏற்கப்பட வேண்டாமா?

'சினிமா ஷூட்டிங்' இல்லாத நேரத்தில், அரசு விளம்பரங்களில் அபாரமாக நடிக்கும் நடிகர்கள் பலர், முடிவில் சொல்வது, 'நம் அரசு மருத்துவமனையை நம்பிக்கையுடன் அணுகுங்கள்' என்பது தான்!ஆனால், மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மக்களின் பிரதி நிதிகளான அமைச்சர் முதல், எம்.எல்.ஏ.,க்கள் வரை, அனைவரும் தேர்வு செய்வது, தனியார் மருத்துவமனைகளை மட்டுமே! முதலில் இவர்கள் அல்லவா நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்!

அக்கம் பக்கம் உள்ள மாநிலங்களை பாருங்கள். அங்கே செயல்படுத்தப்படும் நல்ல விஷயங்களை கவுரவம் பார்க்காமல் இங்கேயும் செயல்படுத்துங்கள். மருத்துவ குழு சொல்வதோடு, மக்கள் குழு சொல்வதையும் கேளுங்கள்.அரசின் வார்த்தைகளை, மக்கள் வரமாக மதிக்கின்றனர்; கேட்கின்றனர். ஆகவே, அதில் குழப்பமோ, பிழையோ வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவிலேயே அதிகம், 'டெஸ்ட்' எடுக்கும் மாநிலம் என்பதால், ஏதும் பெருமையோ, விருதோ வரப்போவது இல்லை. அதற்கு பதிலாக, மக்கள் அச்சமும், பதற்றமும் இல்லாமல் இயல்பாக இருக்கும் மாநிலம் என்றும், மிக அதிகளவில் நோயாளிகள் குணமாகும் மாநிலம் என்றும், தற்போது தொற்று கணிசமாக குறைந்து நாளடைவில் தொற்று இல்லாத மாநிலமாக மாறும் என்றும், நம் மாநிலத்திற்கு பெயர் கிடைக்கும் என்றால், அதுதான் பெருமை! அதற்கு, மக்களே மகத்தான விருது கொடுப்பர்!

-எல்.முருகராஜ்
பத்திரிகையாளர்
தொடர்புக்கு:
murugaraj@dinamalar.in
99443 09637

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X