சென்னை : 'ரிசர்வ் வங்கியின் அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி, கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: வங்கி கடன் தவணையை திருப்பிச் செலுத்த வேண்டும் என, ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டம், மானுார் கிராமத்தைச் சேர்ந்த, விவசாயி ராஜாமணி தற்கொலை செய்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி, வங்கிதவணையைச் செலுத்த வேண்டும் என, விவசாயிகளை, வங்கிகள் மிரட்டுகின்றன.
விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்கு காரணமான, வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, உடனே கைது செய்ய வேண்டும்.ரிசர்வ் வங்கியின் அவகாசம் அளிக்கும் உத்தரவை மீறி, கடன் தவணையை வசூலிக்கும், வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு, விளைநிலங்களை கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாபஸ் பழனிசாமி!
'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:குளறுபடியான புதிய பாடத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, நான் கோரி இருந்தேன். இப்போதாவது, அதை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்து விட்டு, பின் திரும்பப் பெறுவது, இந்த அரசின் வழக்கமாகி விட்டது.லட்சக்கணக்கான மாணவர்களின், எதிர்காலம் சார்ந்த முடிவிலும், இத்தனை அலட்சியமா; சரியான, 'வாபஸ்' பழனிசாமி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.