கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் முன்னேற்றம்! 1,100 பேருக்கு பரிசோதனை துவங்கியது| Dinamalar

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் முன்னேற்றம்! 1,100 பேருக்கு பரிசோதனை துவங்கியது

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 06, 2020 | கருத்துகள் (6) | |
ஐதராபாத் : 'கொரோனா' வைரசுக்கு எதிராக, நம் நாட்டில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து, 1,100 பேருக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், 'ஆக., 15ல் தடுப்பூசியை அறிமுகம் செய்யும் அரசின் முயற்சி சாத்தியமாகும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏழு லட்சத்தை எட்டியுள்ளது. பலி
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் முன்னேற்றம்! 1,100 பேருக்கு பரிசோதனை துவங்கியது

ஐதராபாத் : 'கொரோனா' வைரசுக்கு எதிராக, நம் நாட்டில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து, 1,100 பேருக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம், 'ஆக., 15ல் தடுப்பூசியை அறிமுகம் செய்யும் அரசின் முயற்சி சாத்தியமாகும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏழு லட்சத்தை எட்டியுள்ளது. பலி எண்ணிக்கையும், 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
'கோவாக்சின்'


அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. மனிதர்களுக்கு மருந்து அளிக்கும் பரிசோதனை, சில மாதங்களுக்கு முன் துவங்கியது; தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்துடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும், ஆக., 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினத்தில், இந்த தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்யும் வகையில், பரிசோதனைகள் முடிக்கும்படி, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது. மேலும், பரிசோதனைக்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணியை, 7ம் தேதிக்குள் முடிக்கும்படியும் கூறியிருந்தது.
எதிர்பார்ப்பு


ஆனால், 'சர்வதேச நடைமுறைகளின்படி, ஒரு தடுப்பூசியை தயாரிக்க, 16 - 18 மாதங்கள் தேவை; கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்ட வேண்டாம்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'சர்வதேச விதிகள், நடைமுறைகளுக்கு உட்பட்டே பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன' என, ஐ.சி.எம்.ஆர்., மற்றும் பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளன.இந்நிலையில், மனிதர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பரிசோதனையை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், 375 பேருக்கும், இரண்டாம் கட்டத்தில், 750 பேருக்கும் தடுப்பூசி அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிசோதனைக்காக, நாடு முழுதும், 12 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில மையங்களில், தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதனை செய்வது நேற்று துவங்கியுள்ளதாக தெரிகிறது.இதன் மூலம், நாட்டின் சுதந்திர தினமான, ஆக., 15ல், இந்த தடுப்பூசி மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தியமில்லை!


'தடுப்பூசியை, ஆக., 15ம் தேதி அறிமுகம் செய்வதற்கு சாத்தியமில்லை' என, கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து செயல்படும், விஞ்ஞானிகளின் சங்கமான, இந்திய அறிவியல் அகாடமி கூறியுள்ளது.இந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: நம் நாட்டில், கொரோனா வைரசுக்கு எதிராக, தடுப்பூசி தயாரிக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில், இந்த மருந்துக்கான பரிசோதனைகளுக்கு காலக்கெடு விதித்து செயல்படக் கூடாது.ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் பல கட்டங்கள் உள்ளன. அவற்றை மீறக் கூடாது.நல்ல உடல்நிலையுடன் உள்ளவர்களை மட்டுமே பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டும். பரிசோதனைக்கு முன்வருவோருக்கும் பல கட்ட பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் அற்றது, பலனளிக்கக் கூடியது என, பல கட்ட பரிசோதனைகளில் நிரூபிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கட்ட பரிசோதனைக்குப் பிறகும், அதன் தகவல்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன் பிறகே, அடுத்தக் கட்ட பரிசோதனையை துவக்க வேண்டும்.இவ்வாறு பல நடைமுறைகள் இருக்கும் நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில், ஆக., 15க்குள், தடுப்பூசி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வது சாத்தியமில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
திருந்தவே மாட்டாங்க!


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு, 'ரெம்டெசிவிர்' என்ற மருந்து அளிக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்து உள்ளது. அதையடுத்து, 'ஹெடரோ, சிப்லா' ஆகிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரிப்பதற்கான, லைசென்ஸ் பெற்றுள்ளன. அதில், ஹெடரோ நிறுவனம், ஏற்கனவே உற்பத்தியை துவக்கியுள்ளது.இந்த மருந்து, ஊசி மூலம், ரத்தத்தில் செலுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டுமே இந்த மருந்து கிடைக்கும். மருந்து கடைகளில் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக, சில முக்கிய நகரங்களுக்கு, இந்த மருந்து அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த, ஒரு பிரபலமான நபருக்கு, மருந்து தேவைப்பட்டது. அவருக்காக, 100 மில்லி கிராம் மருந்துள்ள பாட்டிலை, 'பிளாக்'கில் பெற்றுள்ளனர். ஒரு பாட்டிலுக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளனர். இது, மருந்தின் விலையைவிட, ஆறு மடங்கு அதிகமாகும்.இது போன்று அதிகாரம் உள்ளவர்கள், மருந்து நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பிளாக்கில் பெறுகின்றனர். இதைத் தவிர, இந்த மருந்து அனுப்பப்பட்டுள்ள மருத்துவமனைகளில் உள்ள கறுப்பு ஆடுகள், பிளாக்கில் விற்று வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X