புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதம் குறையும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டு உள்ள அறிக்கை: கொரோனா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி இல்லாததால், பொருளாதார வளர்ச்சியின் ஸ்திரத்தன்மையை மதிப்பிடுவது கடினமாக உள்ளது.
மீட்சிப் பாதை
ஊரடங்கால், இறக்குமதி குறைந்துள்ளது. இதன் காரணமாக, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், வரலாறு காணாத சரிவை சந்தித்து உள்ளது. கடந்த நிதியாண்டின், இதே காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போது வரை, மத்திய அரசின் வருவாய், 68.9 சதவீதம் குறைந்துள்ளது.
எனவே, நடப்பு, 2020-21ம் நிதிஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், மத்திய அரசின் சமூக நல ஊக்குவிப்பு திட்டங்கள், பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு திரும்ப உதவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.4 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.
ரூ.2.54 லட்சம்
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக, வரும், 2021-22ம் நிதியாண்டு வரை, 500 முன்னணி நிறுவனங்கள், 1.67 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்த தவறும் என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கொரோனா தாக்கத்திற்கு முன், நிறுவனங்கள், அடுத்த நிதியாண்டு வரை, செலுத்த தவறும் கடன், 2.54 லட்சம் ரூபாய் என, மதிப்பிடப்பட்டிருந்தது. இது, மறுமதிப்பீட்டில், 4.21 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது, என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.