சிஸ்டம்... மாறாவிட்டால் கஷ்டம்!

Added : ஜூலை 07, 2020
Share
Advertisement
பணி நிமித்தமாக தெக்கலுார் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில், கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி போலீசார், தடுத்து நிறுத்தினர். அடையாள அட்டை காண்பித்த பிறகே அனுமதித்தனர். ஏராளமான கார்கள் வரிசையாக நின்றிருந்தன.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இ-பாஸ் கொடுக்கறதுக்கு ஏகப்பட்ட 'ரூல்ஸ்' சொல்றாங்க. இவ்ளோ வண்டி நிக்குதே. பாஸ்
 சிஸ்டம்... மாறாவிட்டால் கஷ்டம்!

பணி நிமித்தமாக தெக்கலுார் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில், கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி போலீசார், தடுத்து நிறுத்தினர். அடையாள அட்டை காண்பித்த பிறகே அனுமதித்தனர். ஏராளமான கார்கள் வரிசையாக நின்றிருந்தன.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இ-பாஸ் கொடுக்கறதுக்கு ஏகப்பட்ட 'ரூல்ஸ்' சொல்றாங்க. இவ்ளோ வண்டி நிக்குதே. பாஸ் இல்லாம, இவ்ளோ துாரம் வர முடியுமா,'' என, கிளறினாள்.''மித்து, இ-பாஸ் கேட்டு, கலெக்டர் கவனத்துக்கு போனா, நியாயமான காரணமா இருந்தா, 'ஓகே' சொல்றார். இல்லேன்னா, 'ரிஜக்ட்' பண்ணிடுறாரு. வருவாய்த்துறை அதிகாரிங்க, 'ரெகமன்டேசன்' செஞ்சா, 'ஓகே' ஆயிடுதாம். 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தா, 'இண்டஸ்ட்ரி' பாஸ் கிடைக்குதாம். அதை வச்சுக்கிட்டு, ஏகப்பட்ட பேரு வர்றாங்களாம்,''''அதிருக்கட்டும், ஹெல்த் டிபார்ட்மென்ட் அதிகாரிகளுக்கு பிரைவேட் ஆஸ்பத்திரிக்காரங்க, நெருக்கடி கொடுத்தாங்களாமே,''''அதுவா, 'கொரோனா' பாதிப்புக்குள்ளாகி, வர்றவங்களுக்கு, சிகிச்சை அளிக்க, சில பிரைவேட் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. ஒரு ஆஸ்பத்திரியில, எல்லா நோயாளிகளையும் ஒரே வார்டுல தங்க வச்சு, சிகிச்சை அளிக்கிறாங்களாம்.''மத்தவங்களுக்கும் நோய் பரவுறதுக்கு வாய்ப்பா இருக்குதுன்னு, ஹெல்த் ஆபீசர்களுக்கு புகார் போயிருக்கு.கள ஆய்வுக்கு போன, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க, பாதுகாப்பு அம்சம் எதுவுமே இல்லாம இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்க. கடுமையா, 'வார்னிங்' பண்ணியிருக்காங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல, ஆய்வுக்கு போன அதிகாரிகளுக்கு மேலிடத்துல இருந்து அழுத்தம் வந்திருக்காம். அந்த ஆஸ்பத்திரி பக்கமே, ஹெல்த் அதிகாரிங்க போறதில்லை,''''ஆனா, அந்த ஆஸ்பிட்டலில், 'அட்மிட்' ஆகுறதுக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஐடியா கேட்டாராமே,''''இதுவும் ஒனக்கு தெரிஞ்சு போச்சா. எம்.எல்.ஏ., குடும்பத்துக்கு தொற்று உறுதியானதும், கார்ப்பரேசன் ஆபீசர்ஸ் நேர்ல போயி, ஆறுதல் சொல்லியிருக்காங்க. அப்ப, பிரைவேட் ஆஸ்பத்திரியில, 'டிரீட்மென்ட்' எடுக்குறதுக்கு 'பர்மிஷன்' கேட்டிருக்கிறாரு.''அதுக்கு, கார்ப்பரேஷன் அதிகாரியான எனக்கு நோய் வந்தா, கவர்மென்ட் ஆஸ்பத்திரியில தான், 'டிரீட்மென்ட்' எடுப்பேன். இது, ஒங்க கவர்மென்ட்; இனி, உங்க இஷ்டம்னு சொன்னதும், இ.எஸ்.ஐ.,க்கு போயிட்டாங்களாம்,''''இ.எஸ்.ஐ.,யில இட நெருக்கடி இருக்குதுன்னு சொல்றாங்களே, உண்மைதானா,''''அதிகாரிகளிடம் கேட்டா, மழுப்புறாங்க. 'கொடிசியா'வுல, ஒரே நேரத்துல, 400 பேருக்கு சிகிச்சை அளிக்கிறதுக்கு, படுக்கை வசதி செய்ய சொல்லியிருக்காங்க. முதல்கட்டமா, 200 படுக்கை வசதி செஞ்சிருக்காங்க,''''அதிருக்கட்டும், கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு, 'கொரோனா' டிரீட்மென்ட்டுக்கு போனா, ஏதாச்சும் காரணம் சொல்லி, திருப்பி அனுப்பிடுறாங்களாமே,''''ஆமாப்பா, கவர்மென்ட் ஆஸ்பத்திரியிலும், இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரியிலும் அப்படித்தான் நடக்குது. 'கொரோனா' பரிசோதனை செய்யணும்னு யாராச்சும் வந்தா, பிரைவேட் ஆஸ்பத்திரியில பரிசோதிக்கச் சொல்லி, திருப்பி அனுப்பிடுறாங்களாம்,'' என்றபடி, நீலாம்பூர் சோதனை சாவடியை கடந்தாள் சித்ரா.அப்போது, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' என, எழுதப்பட்டிருந்த, ஒரு வாகனம், அவர்களை முந்திச் சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' செயல்பாட்டை இரண்டு மாசத்துக்கு தற்காலிகமாக தடை செஞ்சு அரசு உத்தரவிட்டிருக்கு. நம்மூர்ல அந்த அமைப்பையே கலைச்சா நல்லாயிருக்கும்னு சொல்றாங்க. ஏன்னா, அந்த அமைப்புல இருக்குற முக்கிய நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார், முறைகேடு புகார் இருக்காம்,'' என்றாள்.''முறைகேடுன்னு சொன்னதும், எனக்கொரு விசயம் ஞாபகத்துக்கு வருது. அன்னுார் ஒன்றியத்துல, குப்பனுார் ஊராட்சியில, தலா, ரூ.8 லட்சம் மதிப்புல, இரண்டு இடத்துல தடுப்பணை கட்டுறாங்களாம். கன மழை பெஞ்சா, தடுப்பணை காணாம போயிடுற அளவுக்கு தரமில்லாம கட்டியிருக்கிறதா, அதிகாரியிடம், விவசாயிகள் புகார் மழை வாசிச்சிருக்காங்க. அவரோ, கண்டுக்காம போயிட்டாராம்,'' என்ற சித்ராவின் மொபைல் போன் ஒலித்தது.ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்திய சித்ரா, மொபைல் போன் அழைப்பை ஏற்று, ''சரவணன், உங்களை ஒசத்தியா நினைச்சேன். நீங்க, இப்படி செய்வீங்கன்னு நெனைக்கலை. இப்ப, 'டிரைவிங்'குல இருக்கேன். பிறகு, கூப்பிடுகிறேன்,'' என, பேசி விட்டு, இணைப்பை துண்டித்தாள்.''நவ., மாசம் வரைக்கும், ரேஷன் கடையில இலவசமா அரிசி கொடுக்கப் போறாங்களாமே,'' என, கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா, உண்மை தான். பொருளாதார ரீதியா, பொது ஜனங்க ரொம்பவே கஷ்டத்துல இருக்காங்க. இப்ப, ரேஷன் கடையில கொடுக்குற அரிசி ரொம்ப நல்லாயிருக்கு. வசதி படைச்சவங்களும் ரேஷன் அரிசி வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, சமூக இடைவெளி பின்பற்றணும்னு ஊருக்கெல்லாம் புத்திமதி சொல்லிட்டு, டோக்கன் கொடுக்குறதா சொல்லி, ஒரே இடத்துக்கு வரச் சொல்றாங்க. அதுதான், சங்கடமா இருக்கு''''அப்படியா, வீடு வீடா போயிதானே, டோக்கன் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க,''''அதெல்லாம், அரசாங்க உத்தரவு. சிங்காநல்லுார் பக்கத்துல, கள்ளிமடை ரேஷன் கடை ஊழியர்கள், கோவில் மைதானத்துக்கு மக்களை வரவழைச்சு, டோக்கன் கொடுத்திருக்காங்க,''''ரேஷன் கடையை பத்தி சொன்னதும், இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. பஸ் ஸ்டாண்டுல, ஒரு 'லேடி'க்கு சி.எம்., ரேஷன் கார்டு கொடுக்கச் சொன்னாரே, கொடுத்தாங்களா, இல்லையா,'' என, நோண்டினாள் சித்ரா.''அக்கா, நானும் அதைப்பத்தி விசாரிச்சேன். பதற்றத்துல, அந்த, 'லேடி'யை பத்தி, கலெக்டர் அலுவலக அதிகாரிங்க, முழுசா விசாரிக்காம விட்டுட்டாங்க. இப்ப கேட்டா, வெளியூர்க்காரங்க, வெளிமாவட்டத்துக்காரங்கன்னு, சப்பைக்கட்டு காரணம் சொல்றாங்க,''''என்னடி சொல்றே, எந்த ஊரா இருந்தா என்ன, சி.எம்., உத்தரவு போட்டிருக்காரு. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கலாமே,'' என்ற சித்ரா, ''எதிர்ப்பை மீறி, கார்ப்பரேஷன்ல மறுபடியும் அந்த அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருக்காங்களே,'' என, 'ரூட்' மாறினாள்.''அக்கா, அதெல்லாம் எனக்கு பெருசா தெரியலை. அவரு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு வேண்டப்பட்டவர். அதனால, எப்படியும் பணி நீட்டிப்பு செய்வாங்கன்னு தெரியும். ஆனா, கார்ப்பரேஷன்ல இருந்து, ஆஹா... ஓஹோன்னு... புகழாரம் சூட்டி, ஐந்து பக்கத்துக்கு பரிந்துரை அனுப்பி இருந்தாங்க. அதை படிச்சு பார்த்தா, 'பக்'குன்னு ஆயிடுச்சு,''''வழக்கமா, பணி ஓய்வு பெறும் நாளன்று இரவுக்குள், பணி நீட்டிப்பு உத்தரவு வரும். அன்னைக்கு, இரவு, 9:00 மணி வரைக்கும் உயரதிகாரிங்க காத்திருந்தாங்க. இந்த தடவை, 'லேட்'டா தான் வந்திருக்கு. இருந்தாலும், முன்தேதியிட்டு உத்தரவு கொடுத்திருக்கிறதா, கார்ப்பரேஷன் வட்டாரத்துல பேசிக்கிட்டாங்க. இதுசம்பந்தமா விசாரிச்சா, உயரதிகாரிக்கு, 'வாட்ஸ்ஆப்'புல, ஆர்டர் வந்திருச்சு; தபாலில் வர்றதுக்கு, 'லேட்' ஆகிடுச்சுன்னு சொன்னாங்களாம்,'' என்றபடி, ஹோப் காலேஜ் பகுதியில், மெடிக்கல் ஷாப் அருகே ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.நடைபாதையில் நின்றிருந்த இருவர், யானைகள் இறப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அதைக்கேட்ட மித்ரா, மாத்திரை வாங்கி வந்ததும், ''அக்கா, சாடிவயல் யானைகள் முகாமில், 'சுயம்பு', 'வெங்கடேஷ்'ன்னு, இரண்டு 'கும்கி'கள் வச்சிருக்காங்க. எல்லை தாண்டி, கிராமத்துக்குள்ள காட்டு யானை வந்தா, விரட்டி விடணும். இப்ப, அப்படி செய்றதில்லை.''கேட்டா, சுயம்புக்கு மதம் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. துாரத்துல இருந்துதான், உணவை துாக்கி வீசுறாங்களாம். பாகன் கூட, நெருங்கிப் போறதில்லையாம். இந்த முகாமுல, என்ன நடக்குதுன்னே தெரியலைன்னு, வன ஊழியர்களே புலம்புறாங்க,'' என்றாள்.பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரியை கடந்ததும், ''மித்து, கல்வித்துறை சப்ஜெக்ட் எதுவுமே இல்லையா,'' என, நோண்டினாள்.''அக்கா, கல்வித்துறையில ஏகப்பட்ட விஷயம் நடக்குது. செமஸ்டர் தேர்வு நடத்துறது சம்மந்தமா, அந்தந்த மாநிலமே முடிவு செய்யலாம்னு, யு.ஜி.சி., சொல்லியிருச்சு.''தமிழகத்துல என்ன செய்யலாம்னு, முடிவு செய்றதுக்கு கமிட்டி அமைச்சிருக்காங்களாம். இந்த கமிட்டியில, பாரதியார் பல்கலையை சேர்க்கலையாம். கல்வித்துறை வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''''அப்படியா, ஸ்டேட் லெவல்ல, நம்பர் ஒன் பல்கலைன்னு மத்திய அரசால், சர்ட்டிபிகேட் வாங்குன யுனிவர்சிட்டியாச்சே. அதையே கமிட்டியில சேர்க்கலையா,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.பீளமேடு சிக்னலில், காத்திருந்தனர். அருகில், செங்கல் லோடு லாரி நின்றிருந்தது.அதைப்பார்த்த மித்ரா, ''தடாகத்துல, நுாத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளை இருக்குது. அரசு தரப்புல எந்த சூளைக்கும் அனுமதி கொடுக்கலைன்னு சொல்றாங்க. பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருக்காங்களாம். ஆனா, மாவட்ட நிர்வாகம் அதிரடியா எந்த நடவடிக்கையும் எடுக்காம, மவுனமா இருக்குது. மாங்கரை சோதனை சாவடியை கடக்குறதுக்கு, ஒவ்வொரு லாரியும், 'கப்பம்' கட்டணுமாம். லோக்கல் போலீசுக்கும் மாசந்தவறாம பங்கு போயிடுதாம்,'' என்றாள்.அதைக்கேட்ட சித்ரா, ''ரஜினி சொல்ற மாதிரி, நம்மூர்ல, 'சிஸ்டம்' சரியில்லை. ஒட்டுமொத்த நடைமுறையையே மாத்தி அமைச்சாதான், நேர்மையான நிர்வாகம் நடக்கும் போலிருக்கு,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X