கடத்தல் கும்பலால் கேரள முதல்வருக்கு சிக்கல்! ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது| Kerala gold smuggling case: Key suspect's link puts Chief Minister's Office in spot | Dinamalar

கடத்தல் கும்பலால் கேரள முதல்வருக்கு சிக்கல்! ரூ.15 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது

Updated : ஜூலை 08, 2020 | Added : ஜூலை 07, 2020 | கருத்துகள் (14)
Share

திருவனந்தபுரம்: வெளிநாட்டு துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கேரளாவுக்கு, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கர், அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தங்க கடத்தலில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ள நிலையில், மாநில தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த ஸ்வப்னாவை, சுங்கத் துறையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தால், முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.latest tamil news


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரளாவைச் சேர்ந்த பலர், வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். இதனால், பல்வேறு நாடுகளின் துாதரக கிளை அலுவலகங்கள், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துாதரக கிளை அலுவலகமும் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது.


தீவிரம்:


இந்நிலையில், இத்துாதரகத்தில் பணியாற்றும் சிலரின் உதவியுடன் தங்க கடத்தல் ஜோராக நடப்பதாக சுங்கத் துறை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வரும் பொருட்களை சுங்கத் துறை யினர் கண்காணித்தனர். சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து வந்த ஒரு பார்சலை, துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் முன்னிலையில், சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், கதவுக்கு பயன்படுத்தப்படும் கைப்பிடி, தாழ்ப்பாள், சிறிய இரும்பு குழாய் போன்றவை இருந்தன. அவற்றில், தங்கக் கட்டிகளும் இருந்தன.


latest tamil news


30 கிலோ எடையுள்ள அந்த தங்கக் கட்டிகளின் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய். அந்த பார்சலின் மேல், துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அவரது மனைவி அனுப்பியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது, 'இந்த பார்சலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. என் மனைவி இதை அனுப்பவும் இல்லை' என்றார். மேலும் இது குறித்து விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது.


முறைகேடு:


அப்போது தான், துாதரக அலுவலகத்தில் ஏற்கனவே மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றிய சர்ஜித் என்பவருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர், ஆறு மாதங்களுக்கு முன், முறைகேடு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும், துாதரக அலுவலகத்துக்கு வரும் பார்சல்களை விமான நிலையத்திலிருந்து எடுத்து வரும் பணியை, ஒப்பந்த அடிப்படையில் அவர் செய்வதும், தெரிய வந்தது.

சர்ஜித்தை பிடித்து அதிகாரிகள் விசாரித்த போது, தங்கக் கடத்தலில் தொடர்பிருப்பதை ஒப்புக் கொண்டார். மேலும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா என்ற பெண்ணுடன் இணைந்து, இந்த கடத்தலை செய்வதையும் தெரிவித்தார். இதையடுத்து, ஸ்வப்னாவை தேடியபோது, அவர் தலைமறைவாகி விட்டார். இவரும், ஆறு மாதங்களுக்கு முன், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் நிர்வாக செயலராக பணியாற்றியது தெரிந்தது. மாநில அரசில் உள்ள தனக்கு நெருக்கமான அதிகாரிகள் உதவியுடன், தகவல் தொழில்நுட்ப துறையில் மேலாளராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இரண்டு நாட்களுக்கு முன்பே, ஸ்வப்னா பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகளின் சந்தேக பார்வை, தகவல் தொழில்நுட்ப செயலராக பணியாற்றி வரும், மூத்த அதிகாரி சிவசங்கர் மீது திரும்பியது.


latest tamil newsஅதிரடி:


முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் என்ற முக்கிய பொறுப்பையும், இவர் வகித்து வந்தார். ஸ்வப்னாவுக்கும், சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து, சிவசங்கர், அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனாலும், தகவல் தொழில்நுட்ப செயலர் பதவியில் அவர் நீடிக்கிறார். இந்த பரபரப்பான சம்பவங்களை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன், தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்தாரா என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளன.

பினராயி விஜயனிடமும், சுங்கத் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், பினராயி விஜயனின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


'எனக்கு எதுவும் தெரியாது'


இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் பெண் குறித்து, எனக்கு எதுவும் தெரியாது. அந்த பெண், யாருடைய பரிந்துரையின் கீழ், தகவல் தொழில்நுட்ப துறையில் நியமிக்கப்பட்டார் என்ற விபரமும் தெரியாது. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக நடந்த மிகப் பெரிய கடத்தலை, சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்வர். யார் தவறு செய்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் முதல்வர் அலுவலகத்தின் மீது, சிலர் பழி சுமத்துவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'துாதரகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, கடத்தல் நடந்தது கண்டிக்கத்தக்கது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகாரிகளை கைக்குள் போட்டு தங்க வேட்டை நடத்திய ஸ்வப்னா:


கேரளாவை பூர்வீகமாக உடைய ஸ்வப்னா, 34, ஐக்கிய அரபு எமிரேட்சில் பிறந்து வளர்ந்தவர். அபுதாபி விமான நிலையத்தில் பயணியர் சேவைப் பிரிவில் பணியாற்றிய அவர், 2013ல், கணவரிடம் விவாகரத்து பெற்று, கேரளாவுக்கு திரும்பினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றினார். அப்போது, உடன் பணியாற்றிய அதிகாரி மீது, பொய்யான புகார் கொடுத்து, சர்ச்சையில் சிக்கினார். போலீஸ் விசாரணையில், பொய் புகார் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில் நிர்வாக செயலராக பணியாற்றினார். அப்போது தான், தங்கம் கடத்துவதற்கான சதித் திட்டத்தை தீட்டி, அதை செயல்படுத்தி வந்துள்ளார்.

துாதரகத்திலும் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்ததை மறைத்தது தொடர்பாக, போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேல் மட்டத்திலிருந்து போலீசாருக்கு நெருக்கடி வந்ததாக கூறப்பட்டது. துாதரக அலுவலக பணியிலிருந்து வெளியேறிய போதும், அங்குள்ள அதிகாரிகளுடன், தொடர்பில் இருந்துள்ளார் ஸ்வப்னா.

போலி ஆவணங்களை தயாரித்து, துாதரகத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். துாதரக அதிகாரிகளை சரிக்கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், அடிக்கடி, 'பார்ட்டி' கொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தில், பிரமாண்ட பங்களா ஒன்றையும், ஸ்வப்னா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு, கோடிக்கணக்கில் இருக்கும் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள், ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, அவரை சந்தித்துச் செல்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, தங்க வேட்டை நடத்திய ஸ்வப்னாவை, இப்போது, சுங்கத் துறை அதிகாரிகளும், போலீசாரும் துரத்தத் துவங்கி உள்ளனர்.


பூர்ணாவால் சிக்கியதா கும்பல்?


சவரக்கத்தி, கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூர்ணா, 31. மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார். இவரிடம், திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி, ஒரு கும்பல், மிரட்டி பணம் பறித்ததாக தகவல் வெளியானது. இது குறித்து, அவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த கும்பலைச் சேர்ந்த சிலரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கு தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
மாடல் அழகிகள், பிரபலங்களை பயன்படுத்தி, தங்கக் கடத்தலில் அவர்கள் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இந்த தகவலை, கேரள போலீசார், சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான், தற்போது தங்கக் கடத்தல் கும்பலை பற்றிய ரகசியங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.


முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு!


தங்கக் கடத்தலுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது. கடத்தல் தொடர்பாக சர்ஜித் என்ற நபர் கைது செய்யப்பட்ட பின், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவரை விடுவிக்கும்படி போன் வந்துள்ளது. கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னாவுக்கும், முதல்வரின் முதன்மை செயலராக இருந்த சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சிவசங்கர், தகவல் தொழில்நுட்ப துறை செயலராக உள்ளார். ஸ்வப்னாவும், அந்த துறையில் தான் பணியாற்றி வந்துள்ளார்.
- சுரேந்திரன், கேரள மாநில பா.ஜ., தலைவர்


சி.பி.ஐ., விசாரணை தேவை!


கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகளில், கேரள முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளது. இதுபோன்ற கடத்தல்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன; இப்போது தான் சிக்கியுள்ளனர். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால், மாநில அரசில், அதிகாரத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகள் பலர் சிக்குவர்.
- ரமேஷ் சென்னிதலா, காங்., மூத்த தலைவர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X