திருவனந்தபுரம்: உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசால், பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல், சிக்கித் தவிக்கின்றனர். தங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப அரசிடம் உதவி கோரி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்கர், அமெரிக்காவுக்குத் திரும்ப செல்ல விருப்பம் இல்லை என்றும் கேரளாவிலேயே வாழ்நாளைக் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருப்பது, பலரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர், ஜானி பால் பியர்ஸ், 74. இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். இந்த ஐந்து மாதங்களும் அவருக்கு மறக்க முடியாத இதமான அனுமபவமாக இருந்ததால் தனது மீதமுள்ள வாழ்நாள் முழவதையும், 'கடவுளின் தேசம்' எனச் சுற்றுலா பயணிகள் மற்றும் சூழல் ஆர்வலர்களால் புகழப்படும் கேரளாவிலேயே கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, தன் சுற்றுலா விசாவை, பிசினஸ் விசாவாக மாற்றக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
கடந்த பிப்., 26ம் தேதி சுற்றுலா விசாவில் ஜானி இந்தியா வந்துள்ளார். இந்திய அரசின் விதிமுறைகளின்படி சுற்றுலா விசா 180 நாட்கள் மட்டுமே செல்லும். அவரது விசா ஆக., 24ம் தேதி அன்று காலாவதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜானி பால் பியர்ஸ் கூறுகையில், 'அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த வயதில் அங்கு செல்வது ஆபத்தானது. கடவுளின் சொந்த தேசமான கேரளாவை மிகவும் நேசிக்கிறேன். நான் கேரளாவில் அதிக பாதுகாப்புடன் இருக்கிறேன். இங்கு 25 பேர் மட்டும்தான் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நான் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இங்கேயே அமைதியாக வாழ விரும்புகிறேன். இந்தியாவில் குடியுரிமையைப் பெற எளிதான வழி, இங்குள்ள ஒருவரை திருமணம் செய்வதுதான். எனக்கு 74 வயதாகிவிட்டது. எனவே, இந்த வாய்ப்பை நான் கடந்துவிட்டேன். என்னுடைய தற்போதைய விருப்பம் ஐந்து ஆண்டுகளுக்கான பிசினஸ் விசாவைப் பெறுவதுதான்' எனக்கூறியுள்ளார்.