ஒட்டாவா : கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து புதிதாக 172 பேர் பாதிக்கப்பட்டனர். 15 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கனடாவில் புதிதாக 172 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கனடாவின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,06,000 ஆக உயர்ந்தது. நாட்டின் நோய் தொற்றுக்கு ஒரு நாளில் மட்டும் புதிதாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கனடாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,733 ஆக அதிகரித்தது. கனடா நாட்டில் இதுவரை தொற்று பாதிப்புகளில் இருந்து 70,085 பேர் குணமடைந்துள்ளனர்.

கனடாவின் மொத்த பாதிப்புகளில் பெருமளவு, கியூபெக் மாகாணத்தில் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கியூபெக்கில் மேலும் 60 பேர் பாதிக்கப்பட்டதுடன், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,079 ஆக உயர்ந்துள்ளது. கியூபெக் மாகாணத்தில் இதுவரை 5,603 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,178 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 2,700 ஆகவும் உள்ளது. தொடர்ந்து, மான்ட்ரீல், டொரண்டோ, அல்பெர்ட்டா போன்ற கனடாவின் மற்ற பகுதிகளிலும் தொற்று பரவியுள்ளது.