லண்டன்: காற்றில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றை பிடித்து, உடனடியாக அழிக்கும் புதிய காற்று சுத்திகரிப்பானை (Air filter) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விமானங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா தொற்று பரவலை குறைக்க புதிய கண்டுபிடிப்பு உதவுமெனவும் தெரிவித்துள்ளனர். மெட்டீரியல்ஸ் டுடே பிசிக்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புதிய சாதனம் 99.8 சதவீத கொரோனா வைரஸ் தொற்றை அதன் வடிகட்டி வழியாக ஒரே முறை அனுப்பும் போது இறந்துவிட்டதாக கூறியுள்ளது. 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்பட்ட வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய நிக்கல் நுரையிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த சாதனம், ஆந்த்ராக்ஸ் நோயை ஏற்படுத்தும் கொடிய பாக்டீரியவான பேசிலஸ் ஆந்த்ராசிஸின் வித்துக்களை 99.9 சதவீதத்தையும் கொன்றுள்ளது.
இந்த புதிய சுத்திகரிப்பான் விமானங்கள், விமானநிலையம், பள்ளிகள், அலுவலக கட்டிடங்கள், கப்பல்களின் கொரோனா தொற்று பரவலை தடுக்க உதவியாக இருக்கும். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும். அதன் திறன் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரான ஜிஃபெங் ரென் தெரிவித்துள்ளார். அலுவலக பணியாளரின் உடனடி சூழலில் காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்ட சாதனத்திற்கான மேசை மேல் வைப்பதற்கான மாதிரியையும் உருவாக்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வைரஸ் சுமார் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கக்கூடும் என்பதால், அதை விரைவாக அகற்றக்கூடிய ஒரு வடிகட்டி ஒரு சாத்தியமான திட்டமாகும். மேலும் உலகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், குளிரூட்டப் பட்ட இடங்களில் பரவுவதைக் கட்டுப்படுத்துவது அவசரமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்று 70 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலையை தக்கவைக்க முடியாது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுத்திகரிப்பானின் வெப்பநிலையை சுமார் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மிகவும் வெப்பமாக்குவதன் மூலம் வைரஸை கிட்டத்தட்ட உடனடியாக கொல்ல முடிந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நிக்கல் பல முக்கிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. இது நுண்துகள்கள் கொண்டது. காற்றின் ஓட்டத்தை அனுமதிக்கிறது.
மேலும் மின்சாரம் கடத்தும். இது வெப்பமடைய அனுமதித்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் நிக்கல் குறைந்த எதிர்ப்பு தன்மையை கொண்டிருப்பதால், வைரஸை விரைவாகக் கொல்லும் அளவுக்கு வெப்பநிலையை உயர்த்துவது கடினம். 250 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை உயர்த்தும் அளவுக்கு எதிர்ப்பை அதிகரிக்க, நிக்கலை மடித்து, பல கம்பிகளை மின் கம்பிகளுடன் இணைப்பதன் மூலம் இந்த சிக்கலை தீர்த்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வடிகட்டியை வெளிப்புற மூலத்திலிருந்து சூடாக்குவதை விட, மின்சாரம் மூலம் சூடாக்குவதால், வடிகட்டியிலிருந்து தப்பிக்கும் வெப்பத்தின் அளவு குறைக்கப்படுவதாகவும், ஏர் கண்டிஷனிங் மிகக் குறைந்த அழுத்தத்துடன் செயல்பட அனுமதிக்கிறது என்றும், மின்னோட்டம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை முன்மாதிரி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதித்த போது, வழக்கமான வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளுக்கான தேவைகளை இது பூர்த்தி செய்கிறது என்றும், கொரோனா வைரஸைக் கொல்லக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
இந்த புதிய தொழில்நுட்பம் கொரோனாவின் காற்றில் பரவுவதற்கு எதிரான முதல் வரிசையில் தடுப்பை வழங்குகிறது. மேலும் தற்போதைய தொற்றுநோயையும், உட்புற சூழல்களில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு காற்றில் பரவும் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் என மற்றொரு இணை ஆசிரியரான பைசல் சீமா கூறினார். புதிய சாதனம் அத்தியாவசிய தொழில்களில் முன்னணி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, அத்தியாவசிய தொழிலாளர்கள் பொது வேலை இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.