புதுடில்லி துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில், முடிவு எடுக்காதது குறித்து பதில் அளிக்கும்படி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த கட்சி இரண்டாக பிரிந்தது. தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 11 பேர், தனி அணியாக செயல்பட்டனர்.கடந்த, 2017 பிப்ரவரியில், தமிழக சட்டசபையில், முதல்வர் இ.பி.எஸ்., நம்பிக்கை ஓட்டு கோரினார்.

பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 பேரும், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், இ.பி.எஸ்., தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.இதையடுத்து, இரண்டு பிரிவாக செயல்பட்ட, அ.தி.மு.க.,வினர் ஒன்று சேர்ந்தனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்த விஷயத்தில், தமிழக சபாநாயகரே முடிவு எடுப்பார்' எனக் கூறி, சில மாதங்களுக்கு முன், விசாரணையை முடித்து வைத்தது.
இந்நிலையில், 'உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு மாதங்களாகியும், தமிழக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை' எனக் கூறி, தி.மு.க., சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்கள் விஷயத்தில் இன்னும் ஏன் முடிவு எடுக்கவில்லை என்பது குறித்து, சபாநாயகரும், தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.இதையடுத்து, வழக்கின் விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE