பொது செய்தி

இந்தியா

எல்லையில் முழுமையாக வாபஸ் பெறப்படுகிறதா சீன படைகள்?

Updated : ஜூலை 11, 2020 | Added : ஜூலை 09, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
China, India, LAC, இந்தியா, சீனா, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், ஆலோசனை

புதுடில்லி: எல்லையில் இருந்து சீனப் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அடுத்த சில வாரங்களுக்குள் மீண்டும் பேச உள்ளார். இந்நிலையில், எல்லையில் உள்ள நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை தீவிரமாகி உள்ளது. லடாக்கில், எல்.ஏ.சி., எனப்படும் உண்மையான எல்லை பகுதியை தாண்டி, இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. நம் படைகள் விரைந்து சென்று, சீனாவின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தின.

கடந்த சில வாரங்களாக, எல்லையில் இரு படைகளும் முகாமிட்டிருந்தன. இந்நிலையில், கடந்த மாதம், 15ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு படைகளுக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது. இதில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர் உயிரிழந்தனர். தன் தரப்பில் ஏற்பட்ட சேதத்தை தெரிவிக்க, சீனா மறுத்து வருகிறது. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில், பல கட்ட பேச்சு நடந்தது.

இந்நிலையில், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் யாங் யீ உடன் பேச்சு நடத்தினார். அதைத் தொடர்ந்து, சீனப் படைகள் திரும்பப் பெறப்படுகின்றன. ரோந்துப் பகுதி - 14 எனப்படும் கல்வான் பள்ளத்தாக்கு, ரோந்துப் பகுதி - 15 எனப்படும் ஹாட் ஸ்பிரிங், ரோந்துப் பகுதி - 17 எனப்படும் கோக்ரா ஆகிய கல்வான் பிராந்தியத்தில் இருந்து, சீனப் படைகள் திரும்பப் பெறப்படுகின்றன.

இங்கு அமைத்திருந்த தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்டவற்றை, சீன ராணுவம் அகற்றியுள்ளது. படை வீரர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் இருந்து, 2 கி.மீ., துாரத்துக்கு அவர்கள் பின்வாங்கியுள்ளனர். அதே நேரத்தில், பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து சீன படைகளை திரும்பப் பெறுவது, மிகவும் மந்தகதியில் நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் தன் வீரர்களின் எண்ணிக்கையை, சீனா குறைத்துள்ளது. ஆனாலும், முழுமையாக விலகவில்லை.

இந்நிலையில், சீன விவகாரம் தொடர்பான ஆலோசனை வழங்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.இந்தக் குழுவில், ராணுவ அமைச்சகம், ராணுவ உயரதிகாரிகள், உள்துறை, வெளியுறவுத் துறை என முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகள், ராணுவ நிபுணர்கள் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில், சீனா தன் படைகளை திரும்பப் பெறுவதை தொடர்ந்து கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில், சீன வெளியுறவு அமைச்சர் யாங் யீ உடன், அஜித் தோவல் மீண்டும் பேச உள்ளார். எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, அடுத்தக்கட்ட பேச்சு நடத்துவது தொடர்பாக, அப்போது ஆலோசிக்கப்பட உள்ளது. இது தொடர்பாகவும், உயர் நிலை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எல்லையில் இருந்து சீனப் படைகள் திரும்பப் பெறப்படுவது தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தலைமை தளபதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதற்கிடையே, சீனாவுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவது என்றும், தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பாலங்கள் திறப்பு:

நாட்டின் எல்லை வரை செல்வதற்கு, ராணுவத்துக்கு உதவும் வகையில், அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் எல்லைகளில், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஜம்மு - காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஆறு பாலங்களை, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார். பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி, எம்.எம். நரவானே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு மூலம், இந்த ஆறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அவசர காலத்தில், எல்லை வரை ராணுவம் விரைவாக செல்வதற்கு, இந்த பாலங்கள் மிகவும் உதவும். மொத்தம், 43 கோடி ரூபாய் செலவில் இவை கட்டப்பட்டுள்ளன. அதில் இரண்டு பாலங்கள், ஜம்முவின் கதுவா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அக்னுார் - பலன்வாலா சாலையில், நான்கு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


'நிலைமை மேம்பட்டுள்ளது'

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், நேற்று கூறியதாவது: இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இடையே நடந்த பேச்சின் அடிப்படையில், எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

இரு ராணுவமும், பலனளிக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தற்போது எல்லையில், நிலைமை மேம்பட்டுள்ளது. எல்லை பிரச்னை தொடர்பாக, இரு நாடுகளும், ராணுவம் மற்றும் துாதரக உறவுகள் மூலம் தொடர்ந்து பேச்சு நடத்தும். இதைத் தவிர, ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு மூலமாகவும் பேச்சு தொடரும்.

இரு தரப்பும் இணைந்து, உறுதியான, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளும் முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம். எல்லையில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வது குறித்து பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


நாளை சந்திப்பு:

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு, 2012ல் அமைக்கப்பட்டது. நம் அரசின் சார்பில், வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசியாவுக்கான இணைச் செயலர் நவீன் ஸ்ரீவத்சவா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. சீனா தரப்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல், வூ ஜியாங்கோ தலைமையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்கள் பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தின. கடந்த மாதம், 24ம் தேதி, இந்த ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவின் கூட்டம் நடந்தது. இந்த நிலையில், இந்தக் குழுவின் கூட்டம், நாளை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற துவங்கியுள்ள நிலையில், துாதரக அளவில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
10-ஜூலை-202012:28:18 IST Report Abuse
sankaseshan ஒழுங்காக செய்திகளை படி தயிரியம் இருந்தால் எல்லைக்கு போ
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-ஜூலை-202009:56:00 IST Report Abuse
Lion Drsekar "எல்லையில் முழுமையாக வாபஸ் பெறப்படுகிறதா சீன படைகள்?" இந்த கேள்விக்கு உண்மையிலேயே விடை தெரிந்த ஒரே இயக்கம் நம் நாட்டில் பதவி இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தினம் தினம் அறிக்கை வெளியிடும் இயக்கங்களுக்கு மட்டுமே தெரியும், வந்தே மாதரம்
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
10-ஜூலை-202019:54:07 IST Report Abuse
Raman MuthuswamyThe Military functioning is all TOP SECRET None can question it .....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-ஜூலை-202008:17:00 IST Report Abuse
Darmavan விவரம் கொடுக்காமல் மழுப்பப்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X