சென்னை: கொரோனா தொற்று சிகிச்சைக்கு, சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. 'சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவது ஏன்; அதை புறக்கணிப்பது ஏன்?' என, அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சித்த மருத்துவத்தையும், சித்த மருத்துவர்களையும் முறையாக அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு, சித்த மருந்து கண்டுபிடித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய, சென்னையைச் சேர்ந்த தணிகாசலம் என்பவர் கைது செய்யப்பட்டார். பின், குண்டர் சட்டத்தின் கீழ், இவரை காவலில் வைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள், மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
துரதிருஷ்டவசமானது:
'கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து உள்ளது என, தணிகாசலம் கூறும் போது, அந்த மருந்தை பரிசோதிப்பதற்கு பதில், அவரை கைது செய்தது ஏன்?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, சித்த மருத்துவர்கள் கூறினாலே, சந்தேகப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறியதாவது: சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரத்தை, மத்திய ஆயுஷ் துறையும், மாநில அரசும் வழங்கவில்லை. சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காததும், சித்த மருத்துவர்களை அங்கீகரிக்காததும், துரதிருஷ்ட வசமானது. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக, அரசிடம் தெரிவித்தும், அதை புறக்கணித்ததால், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சுப்ரமணியன் என்ற மருத்துவர் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் உத்தரவிட்டதால், மத்திய அரசின், ஆயுஷ் துறையின் ஆய்வுக்கு, அந்த மருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
சித்த மருத்துவத்தின் மீது, அரசு பாகுபாடு காட்டுவது ஏன்? அதை புறக்கணிப்பது ஏன்? மருத்துவமனைகளில் அலோபதி சிகிச்சை என்ற பெயரில், கபசுர குடிநீர் அளித்து, சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது. உயிரிழப்பு இன்றி, 400க்கும் மேற்பட்டவர்களை, சித்த மருத்துவர் வீரபாபு குணப்படுத்தி உள்ளார்; அவரை பாராட்டுகிறோம். நோய் தொற்றுக்கு மருந்து உள்ளதாக, யாராவது தெரிவித்தால், அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களுக்கு போதிய வசதியையும், உதவியையும் வழங்கி, அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். இவ்வழக்கில், மத்திய ஆயுஷ் துறையையும் சேர்த்து, மத்திய, மாநில அரசுகள், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* கொரோனா வைரஸ் தொற்றுக்கு, மருந்து கண்டுபிடித்துள்ளதாக, இதுவரை, எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?
* அந்த மருந்துகளை பரிசோதித்ததில், நோய் எதிர்ப்பு சக்தி எவற்றில் உள்ளது? மத்திய ஆயுஷ் துறையின் ஆய்வுக்கு, எத்தனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன?
* தமிழகத்தில், சித்த மருத்துவ ஆய்வுக்காக, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
* தமிழகத்தில், சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் எத்தனை உள்ளன? அவற்றில் போதிய மருத்துவர்கள் உள்ளனரா?
* ஐந்து ஆண்டுகளில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி துறைகளின் வளர்ச்சிக்காக, மத்திய ஆயுஷ் துறை எவ்வளவு செலவு செய்துள்ளது?இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
போலியானது:
இதையடுத்து, வழக்கு விசாரணையை, வரும், 23ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.இவ்வழக்கில், போலீஸ் கமிஷனர் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:பதிவு பெற்ற சித்த மருத்துவர் என்ற போர்வையில், தணிகாசலம், அனுமதி பெறாமல் மருந்துகளை தயாரித்து, பொது மக்களுக்கு விற்பனை செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு, மருந்து கண்டுபிடித்திருப்பதாக, பொய்யாக கோரி வருகிறார்.
தகுதி பெற்ற மருத்துவராக, தணிகாசலம் இல்லை. சித்த மருத்துவ கவுன்சிலில், அவர் பதிவு செய்திருக்கவில்லை; அவரது மருத்துவமனையையும் பதிவு செய்யவில்லை. தணிகாசலம் அளித்த சான்றிதழை, சித்த மருத்துவ கவுன்சில் ஆய்வுக்கு அனுப்பியபோது, அது போலியானது என தெரிய வந்தது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE