சென்னை: ரேஷன் அட்டை இல்லாத, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி கூறியதாவது: வெளி மாநில தொழிலாளர்களுக்கு, உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, முழுமையாக பின்பற்றப்படவில்லை.
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இலவச அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அனுமதிரேஷன் அட்டை இல்லாத வெளி மாநில தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேற்கு வங்கத்தில், ரேஷன் அட்டை இல்லாத புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், உணவுப் பொருட்கள் வழங்க, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை கருதி, அவர்களிடம் ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லைஎன்றாலும், அவர்களுக்கு ரேஷன் பொருட்களை, மாநில அரசு வழங்க உத்தரவிடப்படுகிறது.
கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்பிக்காததால், கருவுற்ற பெண்ணுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால், ஆட்டோவில் பிரசவம் நடந்ததாகவும், பிறந்த குழந்தை கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும், வழக்கறிஞர் சூரியபிரகாசம் தெரிவித்தார். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதற்காக, அவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கக் கூடாது.
மருத்துவ உதவி:
கோவை மாவட்டம், துடியலுாரில் சம்பவம் நடந்ததாகவும், 'டிவி' சானலில் இந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்தை கண்டுபிடித்து, தேவையான மருத்துவ உதவியை, அதிகாரிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 13ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE