பீஜிங்: உலகம் முழுக்க ஐந்து லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா என்கிற கொடிய வைரஸ் தற்போது மனித இனத்துக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதனை எதிர்கொள்ள சீன அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல மருத்துவ நிறுவனங்கள் முயன்று வருகின்றன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளது. இதேபோல அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தடுப்பு மருந்து குறித்து முன்னதாக அமெரிக்க நோய்தொற்று நிபுணர் ஆண்டனி பவுசி கூறுகையில், 2021, ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்கா கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சீனாவின் கேன்சினோ நிறுவனம் ரஷ்யா, பிரேசில், சிலி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் கண்டுபிடித்த தடுப்புமருந்து ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளைக் கடந்துவிட்டது. தற்போது இவற்றை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனையை அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி இந்த நிறுவனம் சோதனை செய்ய முயன்று வருகிறது.
இதற்காக சீனாவில் பல தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த தடுப்பு மருந்துக்கு தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். சீனாவின் சுஷோ மாகாணத்தில் நடந்த தொற்றுநோய் தடுப்பு கூட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணைத்தலைவர் குய் டாங்ஸு இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.

மூன்றாம் கட்ட சோதனையில் 40 ஆயிரம் பெயர் உடலில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்களது உடலில் இந்தத் தடுப்பு மருந்து எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என சோதனைமூலம் தெரியவரும். ஏற்கனவே நோய்த் தாக்கப்பட்டவர்கள், நோய் தாக்கம் இல்லாதவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், பதின்பருவத்தினர் ஆகியோரை இந்த சோதனைக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தின் பெயர் ஆட்-5 என்சிஐடி (Ad5-nCov). கடந்த மார்ச் மாதத்திலேயே இந்த சோதனை நடைபெறுவதாக இருந்தது. பின்னர் தள்ளிப் போடப்பட்டது. சீனாவின் மற்ற தடுப்பு மருந்து சோதனை நிறுவனங்களான சினோபெக் பயோடெக் நிறுவனம் மற்றும் சீனோபார்ம் நிறுவனம் ஆகியவை ஏற்கனவே மூன்றாம் கட்ட சோதனை நடத்த அனுமதி பெற்றுவிட்டன.

இதனைத்தொடர்ந்து தற்போது இந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையில் 508 பேர் மீது இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதில் அந்த நிறுவனம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளதாக அதன் இயக்குனர் குய் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை.
தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெற்றால் இதனைத் தயாரிக்க சிறப்பு யூனிட்டுகள் கட்டப்படும். இவற்றில் ஓராண்டுக்கு 100 முதல் 200 மில்லியன் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும். 2021 ஆம் ஆண்டு பிறக்கும் முன்னரே சீனாவில் 200 மில்லியன் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் இருக்கும் என குய் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பு மருந்துகள் சீன ராணுவத்தினர் உடலில் செலுத்தப்பட்டு சோதனை படுத்தப்பட்டன. மேலும் சீனாவின் இருபெரும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இந்த சோதனைக்கு சம்மதித்துள்ளனர். இது குறித்து சீன நோய்த்தடுப்பு அமைப்பின் முன்னாள் தலைவர் செங்க் குவாங் கூறுகையில், தடுப்புமருந்து சோதனைக்கு சீன அரசு முழு ஒத்துழைப்பு அளித்துவருகிறது எனத் தெரிவித்துள்ளார்.