கொச்சி: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப்பை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி என்.ஐ.ஏ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, அந்நாட்டிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த, 30ம் தேதி, தூதரகத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு, 15 கோடி ரூபாய்.
இந்தக் கடத்தல் தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய, சர்ஜித் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கடத்தலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில் முன்பு பணியாற்றியவரும், இப்போது, கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில், அதிகாரியாக பணியாற்றி வரும் ஸ்வப்னா, திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்தீப் நாயர், எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகியோருக்கு, தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இந்த வழக்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வந்தனர். ஸ்வப்னா, முன்ஜாமின் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு முன் ஜாமின் வழங்க, என்.ஐ.ஏ., போலீசாரும், சுங்கத்துறை அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கியிருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப்நாயரை என்.ஐ.ஏ., போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். இருவரையும், கொச்சி அழைத்து வந்து என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையை தொடர்ந்து இருவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.