ஸ்வப்னாவுக்கு 14 நாள் காவல்; ஆளும் கட்சி கலக்கம்| Dinamalar

ஸ்வப்னாவுக்கு 14 நாள் காவல்; ஆளும் கட்சி கலக்கம்

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (28)
Share
kerala, gold smuggling, swapna, arrest

கொச்சி: ஸ்வப்னா அளிக்கவுள்ள வாக்குமூலம், கேரள அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளும் இடது ஜனநாயக முன்னணியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.


30 கிலோ தங்கம்:

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் சிக்கியது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலகத்தில், மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சரித், நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா ஆகியோர், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. சரித் கைது செய்யப்பட்டார்; ஸ்வப்னா தலைமறைவானார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக அலுவலக பணியை, சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்த ஸ்வப்னா, கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில், அதிகாரியாக பணியாற்றி வந்தார். தகவல் தொழில்நுட்ப துறை செயலராகவும், முதல்வரின் முதன்மை செயலராகவும் பணியாற்றிய சிவசங்கருக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பிருப்பதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, முதல்வரின் முதன்மை செயலர் பொறுப்பிலிருந்து, சிவசங்கர் நீக்கப்பட்டார்.


தேடுதல் வேட்டை:

மாநில அரசில் உள்ள மூத்த அதிகாரிகளின் துணையுடன், சரித்தும், ஸ்வப்னாவும் தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னாவை பிடிக்க, சுங்கத் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, தங்க கடத்தல் மூலம் பெற்ற பணம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ., அதிகாரிகள், கேரளாவில் முகாமிட்டு, விசாரணையை துவக்கினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஸ்வப்னா பதுங்கியிருப்பது தெரிய வந்தது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பெங்களூரு சென்று, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையிட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில், ஸ்வப்னா, தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களுடன், தங்க கடத்தல் விவகாரத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் நாயரும் பதுங்கி இருந்தார்.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஸ்வப்னாவையும், சந்தீப் நாயரையும் கைது செய்து, கொச்சிக்கு அழைத்து வந்தனர். எர்ணாகுளம் அருகேயுள்ள ஆலுவா மருத்துவமனையில், இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்பின், கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அங்கு, சிறிது நேரம், இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், மாநில அரசை கண்டித்து, கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், லேசானதடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர்.

இதையடுத்து, இருவரும், கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். ஸ்வப்னாவிடம், அடுத்த கட்டமாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்தும் விசாரணையில், பல மர்ம முடிச்சுகள் அவிழ வாய்ப்புள்ளதாகவும், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்வப்னா தெரிவிக்கவுள்ள முக்கிய தகவல், கேரள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளும் கட்சியினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.


சிக்க வைத்த மொபைல் போன்!

ஸ்வப்னா தலைமறைவான பின், அவரது மொபைல் போன் எண், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவரது கணவர், மகளின் மொபைல் போன் எண்களும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே, தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை விளக்கும் வகையில், கேரள ஊடகங்களுக்கு, ஸ்வப்னா தரப்பில், ஒரு, 'ஆடியோ' அனுப்பப்பட்டிருந்தது. இந்த, 'ஆடியோ' எந்த போனிலிருந்து வந்தது என்பதை, புலனாய்வு துறையினர் கடுமையான முயற்சிக்குப் பின் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே, ஸ்வப்னாவின் மகள், நேற்று முன்தினம் மாலையில், தன் போனை, சிறிது நேரம், 'சுவிட்ச் ஆன்' செய்தார். இதையடுத்து, அந்த போன், பெங்களூரில் உள்ளதை கண்டுபிடித்த அதிகாரிகள், ஐதராபாதில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். ஐதராபாதிலிருந்து பெங்களூருக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த ஸ்வப்னாவை அதிரடியாக கைது செய்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X