காங்., தலைமையின் மீது மூத்த தலைவர்கள் கோபம்!| Dinamalar

காங்., தலைமையின் மீது மூத்த தலைவர்கள் கோபம்!

Updated : ஜூலை 14, 2020 | Added : ஜூலை 13, 2020 | கருத்துகள் (28)
Share
congress, Rajasthan, Sonia, Rahul, Sachin Pilot

புதுடில்லி: ராஜஸ்தானில், காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சியை கைப்பற்றியும், தொடர்ந்து பறிகொடுத்து வருவதால், காங்., தலைமையின் மீது மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்,ஏ.,க்களுடன், டில்லியில் முகாமிட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில், காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தான் சட்டசபைக்கு, 2018 டிசம்பரில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 200 இடங்களில், 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ், 100 தொகுதிகளிலும், பா.ஜ., 76 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் ஆதரவுடன், காங்., ஆட்சியமைத்தது. முதல்வர் பதவிக்கு, அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.


பூசல்


காங்., தலைமை சமாதானம் செய்து, முதல்வர் பதவியை, அசோக் கெலாட்டுக்கு வழங்கியது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இருவருக்கும் இடையேயான மோதல் நீடித்தது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில், காங்கிரஸ் படுதோல்வியடைந்தது; ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் கூட, கெலாட்டும், சச்சின் பைலட்டும் இணைந்து செயல்படவில்லை.

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த மார்ச்சில், பா.ஜ.,வில் சேர்ந்தார். அவருடன், 22 காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ.,வில் சேர்ந்தனர். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையில் இருந்த, காங்., ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்தது.

பா.ஜ.,வில் சிந்தியா சேர்ந்த போது, காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டும் விலகி, பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியானது. இதை, சச்சின் பைலட் மறுக்கவும் இல்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை. ராஜஸ்தானில், கடந்த மாதம், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அப்போது, 'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க, பா.ஜ., முயற்சிக்கிறது' என, முதல்வர் கெலாட் குற்றம் சாட்டினார்.

இருப்பினும், ராஜ்யசபா தேர்தல் சுமுகமாக முடிந்து, காங்கிரஸ், இரண்டு இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ராஜஸ்தான் அரசியலில், சில நாட்கள் அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் பூசல் வெடித்தது. தன் ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., மீண்டும் முயற்சிப்பதாக, முதல்வர் கெலாட் குற்றஞ்சாட்டினார். எம்.எல்.ஏ.,க்களை, 15 கோடி ரூபாய் வரை விலை பேசுவதாகவும் புகார் தெரிவித்தார். ஆனால், இதை மாநில, பா.ஜ., திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட், டில்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன், 20 எம்.எல்.ஏ.,க்கள், டில்லி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர், டில்லியில், காங்கிரஸ் தலைவர், சோனியாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், அவர் காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேருவார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

ராஜஸ்தானில் எழுந்துள்ள பிரச்னை, காங்கிரஸ் மூத்த தலைவர்களை கவலையடைய செய்துள்ளது. இப்போது, மூன்று மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மட்டுமே, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ம.பி., ஆட்சியை இழந்தது போல், அடுத்ததாக ராஜஸ்தானிலும் ஆட்சியை இழக்க நேரிடலாம் என, அச்சம் ஏற்பட்டு உள்ளது.

தற்காலிக தலைவராக பொறுப்பு வகிக்கும் சோனியாவும், கட்சியை கட்டுப்படுத்துவதில்லை; ராகுலும் தன் போக்குக்கு மோடியை குறை சொல்வதிலேயே கவனம் செலுத்துவதாக, மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தி வெடித்துள்ளது.


ஆவேசம்


ராகுலுக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட சிந்தியா, கட்சி மாறிய அதிர்ச்சியிலிருந்து, காங்கிரஸ் இன்னும் மீளவில்லை. தற்போது, ராகுலுக்கு மிக நெருக்கமானவராக கருதப்படும் சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கியுள்ளார். இதே நிலை நீடித்தால், மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும், காங்., தன் அடையாளத்தை இழந்துவிடும் என, மூத்த தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த விஷயத்தில், காங்., மூத்த தலைவர் கபில் சிபல், கட்சி தலைமைக்கு எதிராக பகிரங்கமாக தன் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். ''காங்கிரசை நினைத்து வருத்தமாக இருக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் குழப்பத்துக்கு, விரைந்து தீர்வு காண வேண்டும். ''எப்போது கட்சியின் தலைமை விழித்துக்கொள்ளப் போகிறது; லாடத்திலிருந்து குதிரைகள் அனைத்தும் தப்பி ஓடிய பின்பு தான், விழித்துக்கொள்ளப் போகிறோமா,'' என, அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரசில், திறமைக்கும், உழைப்புக்கும் எந்த மரியாதையும் இல்லை. சச்சின் பைலட் திறமை பற்றி, அனைவருக்கும் தெரியும். ஆனால், ராஜஸ்தானில் அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதேபோல் நான் அவமானப்பட்டதால் தான், காங்கிரசிலிருந்து வெளியேறினேன்.

- ஜோதிராதித்ய சிந்தியா, எம்.பி., - பா.ஜ.,


எம்.எல்.ஏ.,க்களுடன் கெலாட் சந்திப்பு


காங்., - எம்.எல்.ஏ.க்களை அழைத்து, நேற்று ஜெய்ப்பூரில் உள்ள தன் வீட்டில், முதல்வர் கெலாட் ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். சுயேச்சை, எம்.எல்.ஏ., பாபுலால் நாகர் கூறுகையில், ''ராஜஸ்தானில், கெலாட் அரசு கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. கெலாட் தலைமையில், எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

ராஜஸ்தான் மாநில காங்., பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலருமான அவினாஷ் பாண்டே கூறுகையில், ''ராஜஸ்தான் அரசுக்கு, எந்த பிரச்னையும் இல்லை. ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடக்கும். மாநிலத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவருடனும் பேசி வருகிறேன்,'' என்றார்.

காங்., - எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்த, மேலிட துாதர்களாக, அஜய் மகேன், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்.


பொறுமைக்கும் எல்லை உண்டு


பா.ஜ., மீது ஆட்சி கவிழ்ப்பு புகார் கூறிய முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு, தங்களது வாக்குமூலங்களை அளிக்க, சிறப்பு படை போலீசார், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். இது, சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் கூறுகையில், 'இந்த சிறப்பு போலீஸ் படையை நியமித்தது, முதல்வர் தான். சச்சின் பைலட்டை அவமானப்படுத்தும் நோக்கில், இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'தனக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் கூறியுள்ளது, வெறும் கண்துடைப்பு தான். பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை, கெலாட் உணர வேண்டும்' என்றனர்.


சச்சின் பைலட்டுக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு:

தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக, சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். அவர், நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:எனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ராஜஸ்தானில் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டது. ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் தன் வீட்டில், நாளை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் நானும், என் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, எனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X