புதுடில்லி : 'சபஹர் துறைமுக ரயில் திட்டம் தொடர்பாக, இந்தியாவுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, ஈரான் அறிவித்துள்ளது; இது, நமக்கு மிகப் பெரிய இழப்பு. மத்திய அரசின் மோசமான வெளியுறவு கொள்கைக்கு இது நல்ல உதாரணம்' என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கூறியதாவது: மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்திலிருந்து, ஜகிதன் என்ற இடத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, மத்திய அரசு, சில ஆண்டுகளுக்கு முன், அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது. இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க, நம் அரசு முன் வந்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மத்திய ஆசிய நாடுகளுக்கும், நமக்கும் இடையேயான வர்த்தக உறவு அதிகரிக்கும்.
ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை அளிப்பதில், மத்திய அரசு தாமதம் செய்வதாக கூறி, இதிலிருந்து, ஈரான் அரசு விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தை, தாங்களே செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.ஈரானின் இந்த நடவடிக்கை, நமக்கு பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். பா.ஜ., அரசின் மிக மோசமான வெளியுறவு கொள்கைக்கு, இது, நல்ல உதாரணம். இந்த வாய்ப்பை, நம் அண்டை நாடான சீனா பயன்படுத்திக் கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார்.