சச்சின் பைலட் பதவி பறிப்பு! காங்., தலைமை கடுமை| Congress sacks Sachin Pilot, two ministers from Gehlot cabinet as Rajasthan crisis deepens | Dinamalar

சச்சின் பைலட் பதவி பறிப்பு! காங்., தலைமை கடுமை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 14, 2020 | கருத்துகள் (18)
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பைலட் ஆதரவாளர்களாக உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. 'கெலாட் அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது. சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த
Sachin Pilot, rajasthan, congress govt, Madhya Pradesh, ashok ghelot, Congress, சச்சின் பைலட், துணை முதல்வர்,பதவி, பறிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பைலட் ஆதரவாளர்களாக உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. 'கெலாட் அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது. சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மொத்தம், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், கெலாட் அரசுக்கு, 126 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தது. காங்கிரசுக்கு மட்டுமே, 107 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். சிறிய கட்சிகளைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் சுயேச்சைகள் 13 பேர், கெலாட் அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

பா.ஜ.,வுக்கு, 73 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், காங்கிரசைச் சேர்ந்த சச்சின் பைலட், முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியை, காங்., மேலிடம் கொடுத்தது. சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவி மட்டுமே கிடைத்தது. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

முதல்வர் கெலாட்டுடன், அவ்வப்போது மோதல் போக்கை பின்பற்றி வந்த பைலட், தன் ஆதரவாளர்களுடன் இணைந்து தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களை வைத்து குதிரை பேரம் நடத்துவதாக, ராஜஸ்தான் மாநில போலீசார், சச்சின் பைலட்டுக்கு, 'நோட்டீஸ்' அளித்தனர். எரிச்சல் அடைந்த பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக வெளிப்படையாக போர்க் கொடி துாக்கினார்.


latest tamil newsசில தினங்களுக்கு முன், ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பிய சச்சின் பைலட், டில்லியில் முகாமிட்டார். கெலாட் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, பா.ஜ., தலைவர்களுடன், அவர் பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது. காங்கிரசைச் சேர்ந்த, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அவருக்கு இருப்பதாக கூறப்பட்டது. இதனால், கெலாட் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர்.

கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், சொகுசு விடுதிகளில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த, காங்கிரஸ் தலைவர்கள் முயன்றனர்; எடுபடவில்லை. இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று மீண்டும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார். இதையடுத்து, 'சச்சின் பைலட்டிடமிருந்து துணை முதல்வர் பதவியையும், கட்சியின் மாநில தலைவர் பதவியையும் பறிக்க வேண்டும்' என, கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கினர்.

இந்த கூட்டத்துக்குப் பின், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: சச்சின் பைலட்டுக்கு இளம் வயதிலேயே மிகப் பெரிய பதவிகளை கொடுத்து, அவரை அரசியலில் செல்வாக்கு மிக்க நபராக வளர்த்து விட்டவர் சோனியா. ஆனால், பா.ஜ.,வுடன் சேர்ந்து, காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க, பைலட் சதி செய்கிறார். பலமுறை அழைப்பு விடுத்தும், சமாதானத்துக்கு வர மறுத்து விட்டார்.

கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரே, ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்வதை எப்படி பொறுக்க முடியும்? எனவே, துணை முதல்வர் பதவியிலிருந்தும், காங்., மாநில தலைவர் பதவியிலிருந்தும், பைலட், அதிரடியாக நீக்கப்படுகிறார். சச்சின் பைலட்டுக்கு பதிலாக, கல்வித் துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோத்சாரா, ராஜஸ்தான் மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட், கவர்னர் மாளிகைக்குச் சென்று, கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவை சந்தித்தார். அப்போது, சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவாளர்கள் விஷ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் பரிந்துரை செய்தார். ஆட்சியை கவிழ்க்க, இவர்கள் மூவரும் சதி செய்ததாக அவர் குறிப்பிட்டார். முதல்வரின் பரிந்துரையை ஏற்று, மூவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக, கவர்னர் அறிவித்தார்.

இது குறித்து, ராஜஸ்தான் மாநில, பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான குலாப் சந்த் கடாரியா கூறுகையில், ''கெலாட் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது. உடனடியாக சட்டசபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்,'' என்றார்.

இது குறித்து, சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறியதாவது: சச்சின் பைலட்டுக்கு, காங்கிரசைச் சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. சிறிய கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களும், அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர். கெலாட் அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது. உடனடியாக ராஜினாமா செய்வது நல்லது. பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 20 பேரும் ஆலோசனை நடத்தும், 'வீடியோ' வை வெளியிட்டுள்ளோம். கெலாட், தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் யார் என வெளிப்படையாக அறிவிக்கட்டும். பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் பிடியில் வைத்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கெலாட்டுக்கு ஆதரவாக, 107 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதாக, அவர்கள் தரப்பில் கூறினாலும், காங்கிரசை் சேர்ந்த, 90 மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, அவருக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க, 101 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. தற்போதைய தகவலின்படி, 100 பேர் ஆதரவு மட்டுமே, கெலாட் அரசுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு, 73 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சச்சின் பைலட் ஆதரவுடன், சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க, பா.ஜ., மேலிடம் காய் நகர்த்தி வருவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.லட்சியம் தவறல்ல!


சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா போன்ற திறமையும், துடிப்பும் மிக்க இளைஞர்கள், காங்கிரசிலிருந்து வெளியேறுவது, துரதிர்ஷ்டவசமானது. இளம் தலைவர்கள் லட்சியத்துடன் செயல்படுவதை தவறு என கூற முடியாது. காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, கடுமையாக உழைத்தவர்கள் இவர்கள்.
-ப்ரியா தத், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,பழி சுமத்த வேண்டாம்!


முதல்வர் கெலாட், தன் கண்களை மூடியபடி, உலகமே இருண்டு விட்டது என கூறினால், யாரும் நம்ப மாட்டார்கள். உங்களின் ஆட்சி ஆட்டம் காண்கிறது. இதை மறைப்பதற்காக, பா.ஜ., மேலிட தலைவர்கள் மீது பழி சுமத்துவதை கைவிடுங்கள்.
- ஓம் பிரகாஷ் மாத்துார், துணை தலைவர், பா.ஜ.,பின்னணியில் பா.ஜ.,


சச்சின் பைலட்டின் கைகளில் எதுவும் இல்லை; அவரது ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னணியிலும், பா.ஜ.,வின் சதி உள்ளது. பா.ஜ., தலைவர்களின் தாளத்துக்கு ஏற்ப, அவர் ஆட்டம் போடுகிறார். நம் நாட்டில் ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்து விட்டது.
- அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர், காங்.,உண்மை தோற்காது!


சொந்த வீட்டிலிருந்து யாரும் வெளியேற நினைக்க மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து அவமதிக்கும்போது, வெளியேறுவதை தவிர, வேறு வழியில்லை. உண்மையை மறைக்கலாம்; ஆனால், வீழ்த்த முடியாது.
- சச்சின் பைலட், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X