சென்னை: 'திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால், தமிழகம் முழுதும், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி, பணப்புழக்கத்தில் கடும் தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
அவரது அறிக்கை: ஊரடங்கின் கோரப்பிடியில் சிக்கிய அடித்தட்டு மக்கள், ஏழை, எளியவர்கள், எவ்வித வருமானமும் இன்றி, தேவைப்படும் எதையும் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி, பணப்புழக்கத்தில் கடும் தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஊரக வேலை திட்டமும் உற்ற துணையாக இல்லை. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி வேலைக்கு போவோர், அமைப்புசாரா தொழிலாளர்கள் எல்லாம், அடுத்த வேளை உணவுக்கே அவதிப்படும் நிலை உள்ளது.
திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால், மாவட்டங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், இன்றைக்கு மாவட்டங்களில், கொரோனா கொத்துக் கொத்தாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மாவட்டங்களில், வாழ்வாதார பிரச்னை அச்சமூட்டும் வடிவம் எடுத்து, வருமான இழப்பு வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும், 5,000 ரூபாய் பண உதவி வழங்குவது, கூட்டுறவு சங்கங்களில் உள்ள அனைத்து நகைக் கடன்களையும் ரத்து செய்வது, விவசாயிகளின் கடன் ரத்து போன்ற நடவடிக்கைகள் அவசியம்.
வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும். மாணவர்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில், முதல்வர் ஆக்கபூர்வமான முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
காமராஜருக்கு புகழாரம்:
ஸ்டாலின் அறிக்கை:கல்விக் கண் திறந்த காமராஜர், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதல்வர். அரசியல் பொது வாழ்வில், அரிய மாமனிதர். அவரது பிறந்த நாளான இன்று, சென்னை, அறிவாலயத்தில், காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE