சேலம்: பா.ஜ.,வில் இணைந்த ஆறாவது மாதத்தில், ரவுடிக்கு, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதால், நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, ஜனார்த்தன் மகன் முரளி, 42. இவர் மீது, சேலம், டவுன், அன்னதானப்பட்டி, அஸ்தம்பட்டி, அழகாபுரம், பள்ளப்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன்களில், 12 வழக்குகள், மாவட்டத்தில், மல்லூர், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன், நாமக்கல் மாவட்டம், மத்திய குற்றப்பிரிவில், 5 வழக்குகள் உள்ளன. இதில், ஏழு வழக்கில் இருந்து விடுபட்டுள்ளார். மீதி, 10 வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் உள்ளன. மல்லூர் போலீஸ் ஸ்டேஷன், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கர்நாடகா மாநில வியாபாரிகளை மிரட்டி, வெள்ளி கட்டிகளை கடத்தியதாகவும், இடைப்பாடி தொழில் அதிபர் செல்வத்தை கடத்திய வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் இருந்து தப்ப, காங்., கட்சிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கர்நாடகா மாநில, வெள்ளி வியாபாரிகள் சிலரின் பரிந்துரைப்படி, முரளி, தமிழக பா.ஜ., கட்சி இளைஞரணி மாநில தலைவர் வினோபாஜி செல்வத்துக்கு, கடந்த ஜனவரி முதல் வாரம், 'சால்வை' அணிவித்து, அக்கட்சியில் இணைந்தார். தற்போது, ஆறு மாதமே ஆன நிலையில், அதே வெள்ளி வியாபாரிகளின் சிபாரிசால், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி, பா.ஜ., தலைவர் பதவியை கைப்பற்றிவிட்டார். இது, கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என, பல ஆண்டாக உழைத்த, அக்கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE