வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி வரும் நிலையில், ‛தடுப்பூசிகள் பற்றிய கிரேட் நியூஸ்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டது, கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை சூசகமாக கூறியதாக தெரிகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படாததால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே அதிக கொரோனா பாதிப்புள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 35 லட்சத்து 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 39 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு வரும் நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிபர் டிரம்ப் கடும் நெருக்கடியில் உள்ளார். தேர்தலுக்கு உள்ளாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டால் அமெரிக்க மக்களுக்கு பெரும் நிம்மதியை பெற்று தந்து அதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முனைப்பிலும் உள்ளதாக தெரிகிறது. அதனாலேயே தடுப்பு மருந்து குறித்தான ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பயோ தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரிவித்தது. மேலும், ஜூலை 27ம் தேதி மிகப்பெரிய அளவில் மூன்றாம்கட்ட சோதனையை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 87 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ‛தடுப்பூசிகள் பற்றிய கிரேட் நியூஸ்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிரம்பின் இந்த டுவிட், தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம் கிடைத்திருப்பதையே உணர்த்துவதாக தெரிகிறது. எவ்வாறாயினும், அதற்கான விடையை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Great News on Vaccines!
— Donald J. Trump (@realDonaldTrump) July 15, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE