புதுடில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் விலகி செல்லலாம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனை தொடர்ந்து ஆலோசனைக்கு பிறகு, துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட், பா.ஜ.,வில் இணைவார் என வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். நான் பா.ஜ.,வில் இணைய போவதில்லை என சச்சின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின், இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மத்தியில், ராகுல் பேசியதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் விலக நினைத்தால், அவர்கள் விலகலாம். உங்களை போன்ற இளம் தலைவர்களுக்கு கதவுகள் திறந்தே உள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய பிரச்னை குறித்து வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் மேலிடம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சச்சின் பைலட்டிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்த அசோக் கெலாட் மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE