புதுடில்லி: ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடி நாளை(ஜூலை 17) பேசுகிறார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஆசிய - பசிபிக் நாடுகள் சார்பில், இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக, ஒரு மனதாக தேர்வானது. இந்நிலையில், ஐ.நா.,வின் அதிகாரமிக்க பிரிவுகளில் ஒன்றான, பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கூட்டம், நாளை நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக இந்த கூட்டம் நடக்கிறது.
இதில், 'கொரோனாவுக்கு பின் ஒத்துழைப்பு; 75ம் ஆண்டை கொண்டாடும், ஐ.நா., எப்படி செயல்பட வேண்டும்' என்ற தலைப்பில், பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உட்பட பலர் பேசுகின்றனர்.

இந்த கூட்டம் பற்றி, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், திருமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா பரவலால், உலகளவில், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'பல நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதை மாற்ற, பல நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது பற்றி, கூட்டத்தில் பேசப்பட உள்ளது' எனக் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE