கடத்தலில் தொடர்பு
திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்துக்கு வந்த பார்சலில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, தூதரக ஊழியர் சரித், தூதரகத்தில் முன்பு பணியாற்றிய, ஸ்வப்னா சுரேஷ், அவருடைய கூட்டாளி சந்தீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர், எம்.சிவசங்கருக்கும் இந்தக் கடத்தலில் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதையடுத்து, முதன்மை செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தற்போது, சிவசங்கர் ஓராண்டு விடுமுறையில் சென்றுள்ளார். கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவசங்கருக்கு, சுங்கத் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை, 5:15 மணிக்கு துவங்கிய விசாரணை, நேற்று அதிகாலை, 2:15 மணி வரை நடந்தது. தொடர்ந்து, ஒன்பது மணி நேரம் நடந்த விசாரணையின்போது, அவர் கூறியது குறித்து, அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

பல்வேறு கேள்விகள்
தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ள, ஸ்வப்னா உள்ளிட்டோருடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததை, சிவசங்கர் ஒப்புக் கொண்டார். தகவல் தொழில்நுட்ப துறையில், ஸ்வப்னா பணியாற்றியுள்ளார். அப்போது, அலுவலக பணி தொடர்பாக, சிவசங்கருடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்தத் தொடர்பு, நட்பாக மாறியுள்ளது. அதன்பிறகே, சரித், சந்தீப் உள்ளிட்டோரையும், சிவசங்கருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்குள் இடையே உள்ள தொடர்பு குறித்து, பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பல, 'சிசிடிவி' பதிவுகளைக் காட்டி, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த விசாரணையில், திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஸ்வப்னாவுக்காக சிவசங்கர் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தது உறுதியாகியுள்ளது. தனக்கு கீழ் பணிபுரியும் அருண் பாலசந்திரன் மூலம், தன் உறவினருக்காக என்று கூறி வீடு எடுத்துள்ளார். கடும் நடவடிக்கை இந்த வீட்டில் ஸ்வப்னா அடிக்கடி வந்து தங்கி சென்றுள்ளார். இதன் அடிப்படையில், சிவசங்கர் கைது செய்யப்படலாம் அல்லது 'சஸ்பெண்ட்' செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கடத்தல் விவகாரத்தில், சிவசங்கருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, தலைமைச் செயலர் விஷ்வாஸ் மேத்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு, அவர் வகித்து வந்த இரண்டு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE