பெங்களூரு: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவில் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,253 ஆக அதிகரித்து இந்திய அளவில் 4வது இடத்திற்கு வந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 1,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 22ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். நம்மை யார் காப்பாற்றுவது? கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்,' எனப் பதிவிட்டுள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், இந்த வைரஸ் பாகுபாடு காட்டாது. அடுத்த இரண்டு மாதங்களில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் உயரும் என நான் நம்புகிறேன். கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE