கொலம்பியா: இந்தாண்டு இறுதி வரை எச்-1பி, எச்-4 விசா வழங்குவதை நிறுத்தி வைத்த டிரம்பின் உத்தரவுக்கு எதிராக 174 இந்தியர்கள் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினை சேர்ந்தவர்களுக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்களே இந்த எச்-1 பி விசாக்களை அதிகம் பெற்று வருகின்றனர். இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு எச்1பி, எச்4 விசாவை இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். ஊரடங்கால் வேலையிழந்த அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த திடீர் உத்தரவால், இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான இன்ஜினியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், அமெரிக்காவில் உள்ள 174 இந்தியர்கள், எச்-1பி விசா தொடர்பாக டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், எச்-1பி, எச்-4 விசா வழங்குவதைத் தடை செய்து பிறப்பித்த அரசின் உத்தரவு, அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும், பல்வேறு மக்களின் குடும்பத்தினரைப் பிரித்து வைக்கும். டிரம்ப்பின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கேடான்ஜி பிரவுன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, உள்துறை அமைச்சர் சாட் எப் ஒல்ப், தொழிலாளர் துறை அமைச்சர் எஜுனே ஸ்காலியா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.