புதுடில்லி: இந்தியாவில் அடுத்தாண்டு மார்ச் இறுதியில், கொரோனா தொற்று பாதிப்பு மோசமான சூழ்நிலையில் 6.18 கோடியாகவும், சிறந்த சூழ்நிலையில் 37.4 லட்சமாகவும் இருக்குமென இந்திய அறிவியல் நிறுவனம் கணித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் 13 மில்லியன் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மில்லியன் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்திய அறிவியல் நிறுவனத்தின் மாதிரி கணிப்பு, தொற்று நோய்களின் கணித மாதிரியில் ஒரு முன்னுதாரண மாற்றம் மற்றும் மார்ச் 23 முதல் ஜூன் 18 வரையிலான காலத்தில் நாட்டில் பதிவான கொரோனா பாதிப்பின் தரவுகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா பாதிப்பின் தரவுகளை எடுத்து கொண்டால், கணிப்பில் வித்தியாசம் இருக்கலாம். மோசமான சூழ்நிலை என்று குறிப்பிடும் போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உச்சத்தை எட்டாது என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது அக்டோபருக்குள் வரலாமென கணிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாள் ஊரடங்கு இருக்க மாதிரி கணிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துவதுடன், மற்ற நாட்களில் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வந்தால், தொற்று பரவலை குறைக்க பயனுள்ளதாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் நிலையான முன்னேற்றத்துடன் இருப்பதை குறிப்பிட்டதுடன், உரிய மருத்துவ பராமரிப்பு மற்றும் சரியான நேரத்தில் தனிமைப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. இதுவரை தடுப்பூசி கண்டறியப்படாத நிலையில், தொடர்பை தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகள் எனவும் கூறியுள்ளது.