புதுடில்லி: தகுதி நீக்கம் செய்வது விளக்கம் கேட்டு ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது எம்.எல்.ஏ.,க்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு, எதிராக துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட் தன் ஆதரவாளர்கள் 18 பேருடன் போர்க்கொடி தூக்கி டில்லியில் தங்கியுள்ளார். இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் முதல்வர் அசோக் கெலாட், காங்., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை ஜெய்ப்பூரில் உள்ள தன் வீட்டில் கூட்டினார். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷி உத்தரவிட்டார். ஆனால், சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும் இரண்டு அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால், துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவு அமைச்சர்களும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், இதனால் சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மகேஷ் ஜோஷி சபாநாயகர் சி.பி., ஜோஷிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து 19 பேரிடமும் விளக்கம் கேட்டு, ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சச்சின் பைலட் மற்றும் அவரது எம்.எல்.ஏ.,க்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.