கருப்பர் கூட்டம் யு -டியூப்' சேனல் சுரேந்தர் புதுச்சேரியில் சரண்

Added : ஜூலை 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி :'கருப்பர் கூட்டம் யு -டியூப்' சேனலில், கந்தர் சஷ்டி கவசம் குறித்து விமர்சித்த வழக்கில், தேடப்பட்டு வந்த சுரேந்தர் என்பவர், புதுச்சேரியில் சரண்டர் ஆனார். முருகப் பெருமானை வழிபடும் வகையிலான, கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து, 'கருப்பர் கூட்டம்' என்ற, யு -டியூப் சமூக வலைதள பக்கத்தில், வீடியோ பதிவிடப்பட்டது. இது, ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய, சுரேந்தர் நடராஜன் என்பவர், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இவ்வழக்கில், 'யு டியூப்' சேனல் நிர்வாகி, சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், 49, என்பவர், நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.தேடப்பட்டு வந்த சுரேந்தர், சரண் அடைவதற்காக, புதுச்சேரி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம், 1.௦௦ மணிக்கு வந்தார். தகவலறிந்து, தமிழக போலீசார் அங்கு வந்தனர். சென்னை மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் பிரபாகர், ஏ.எஸ்.பி., சரவணகுமார் தலைமையிலான போலீசார், சுரேந்தரை கைது செய்து, அழைத்து சென்றனர்.* அமைச்சர் சாடல்பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ''விஷத்தை தூவும் வேலையை அந்த கூட்டம் செய்கிறது. இனம், மதவாரியாக மக்களை பிரிக்க சதி நடக்கிறது. இதை அரசு வேரோடு அறுக்கும். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்து பிழைப்பு நடத்துபவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்,'' என்றார். * ஆதினம் கண்டனம்கோவை மாவட்டம், பதுவம்பள்ளி, முக்கண்ணீஸ்வரர் கோவில் ஆதினம் ராமலிங்க சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:பாரத நாட்டு கலாசாரம் உலகிலேயே தொன்மையானது; முதன்மையானது. இந்த கலாசாரத்தின் வழி வந்தது தான், முருகப் பெருமான் வழிபாடு. முருகப் பெருமானை வழிபடும் வகையில் பாடப்பட்ட கந்தர் சஷ்டி கவசம், பல கோடி ஹிந்துக்களால், முருகன் கோவில்களில் பாடப்படுவது. அதை ஆபாசமாக சித்தரித்து பேசுவது, ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகும். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.* பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு'இந்த விவகாரத்தில் அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் நாகர்கோவிலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழ் ஹிந்துக்கள் புனிதமாக போற்றும், முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சனம் செய்துள்ளதால், உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் கொதித்து எழுந்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். உலகம் முழுதும் உள்ள தமிழ் ஹிந்துக்கள், இதற்காக போராட முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோட்டை விட்ட புதுச்சேரி போலீசார் மதியம், 1.௦௦ மணிக்கு சுரேந்தர், அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முன் நின்றிருந்தார். முக்கிய வழக்கில், தமிழக போலீசாரால் தேடப்படுபவர் என தெரிந்தும், அவரை கைது செய்ய, புதுச்சேரி போலீசார் முனைப்பு காட்டவில்லை. மாலை, 5:௦௦ மணிக்கு தமிழக போலீசார் வரும் வரை, சுரேந்தர் அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே காத்திருந்தார்.மேலும், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், வெளியூரில் இருந்து வருபவர்கள், 'இ - பாஸ்' இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இருக்கும்போது, சுரேந்தர் எப்படி புதுச்சேரிக்குள் நுழைந்தார்; அவர் எந்த வழியாக வந்தார், எத்தனை நாட்கள் தங்கி இருந்தார், அவருக்கு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என, வருவாய் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சஷ்டி கவசம்ஒப்புவித்தல் போட்டிகந்த சஷ்டி கவசத்தின் மேன்மையை குழந்தைகளுக்கு உணர்த்தும் வகையில், ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.'ஸ்ரீ மகா பெரியவர் கைங்கர்யம் டிரஸ்ட்' சென்னை மற்றும் திருச்சி மாவட்ட கிளைகள் சார்பில், தமிழகம் முழுதும் இப்போட்டி நடக்கிறது. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கேற்கலாம். கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்து, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, வரும், 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது: குழந்தைகளின் மனதில், முருகன் பக்தியை விதைக்கும் நோக்கத்தில், ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை மனப்பாடம் செய்து, வீடியோவில் பாடி, 90470 80061, 91591 74455 ஆகிய, 'வாட்ஸ் ஆப்' எண்களில் பதிவிட வேண்டும். முதல் பரிசாக, ௧ கிராம் தங்க நாணயம்; இரண்டாம் பரிசாக, அரை கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும், ஆறுதல் பரிசாக தலா, 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X