லுகுங் : ''இந்தியா, பலவீனமான நாடு அல்ல; அதன் ஒரு அங்குல நிலத்தை கூட, எந்த நாடும் தொட முடியாது,'' என, ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர், இரண்டு நாள் பயணமாக, நேற்று லடாக் சென்றார். அவருடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி, நரவானே ஆகியோர் சென்றனர். லடாக்கில், ராணுவ அணிவகுப்பை ஏற்ற, ராஜ்நாத் சிங், பின், வீரர்கள் நிகழ்த்திய, 'பாராசூட்' சாகசங்களை கண்டு ரசித்தார்.
ஆலோசனை
இதையடுத்து, ஸ்டக்னா, லுகுங் எல்லைப் பகுதிகளில், ராணுவ கண்காணிப்பு நிலவரத்தை பார்வையிட்ட அவர், அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, லுகுங்கில், பன்காங் சோ ஏரிக்கரையில், ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் மத்தியில், ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: லடாக்கின் கிழக்கு எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணித்து, இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக, இந்தியா - சீனா இடையே பேச்சு நடைபெற்று வருகிறது. ஆனால், அதில் எந்த அளவிற்கு தீர்வு ஏற்படும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது.
அதேசமயம் ஒன்று மட்டும் கூற முடியும். இந்தியா, பலவீனமான நாடு அல்ல. நம் நாட்டின் ஒரு அங்குல நிலத்தில் கூட, உலகின் எந்த ஒரு சக்தியாலும் கை வைக்க முடியாது. நம் ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம், வீணாகிப் போக விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
நான்கு கட்ட பேச்சு
லடாக்கின் கிழக்கு எல்லையில், இந்திய - சீன படைகளை விலக்குவது தொடர்பாக, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் இடையே, இதுவரை நான்கு கட்ட பேச்சு நடைபெற்றுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள, பன்காங் சோ எல்லை பகுதியில் தான், ராஜ்நாத் சிங் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்நாத் சிங், இன்று ஜம்மு - காஷ்மீர் செல்கிறார். அங்குள்ள எல்லை நிலவரம், ராணுவ வீரர்களின் தயார் நிலை ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.