ஈரோடு : ''தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் இல்லை,'' என, முதல்வர், இ.பி.எஸ்., கூறினார்.
ஈரோடில் நேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பேட்டி:மின் கட்டண உயர்வு பற்றி, குறை கூற ஏதுமில்லை. நான்கு மாதங்களாக, மின் வாரிய கணக்கீட்டாளர்கள் வீடு, நிறுவனங்களுக்கு சென்று கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால், நான்கு மாத அளவீடு, 800 யூனிட்டாக இருந்தால், அதை 400, 400 என, பிரித்து கணக்கீடு செய்கிறோம்.
ஈரோடு பகுதியில் சாயக்கழிவால் நோய்கள் வருகிறது என, ஆராய்ச்சியில் கூறவில்லை. இங்கு செயல்படும் தொழிற்சாலைகள், பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்து, நீரை வெளியேற்றுகின்றன. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முதன்மை பணியாளர்களான டாக்டர், செவிலியர்கள் இறந்தால், 50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதே பணியில் ஈடுபடும் போலீஸ், வருவாய், உள்ளாட்சி துறையினர் இறந்தால், 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவை விரைவில் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டம், பவானி, அந்தியூர் சட்டசபை தொகுதி உட்பட சில தொகுதிகளை இணைத்து, இடைப்பாடி மாவட்டம் உருவாக்கப்படுவதாக வரும் தகவல்களில் உண்மைஇல்லை. இனி, தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்குவது, பிரிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. அதுபோல, ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணமும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தொழில் மேம்பாடு: அரசு நடவடிக்கை
ஈரோடில், சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. முதல்வர், இ.பி.எஸ்., தலைமை வகித்தார். இதில், தொழிலதிபர்கள் பேசியதாவது: கொரோனா ஊரடங்கால், வடமாநில தொழிலாளர்களை, மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர போக்குவரத்து வசதியில்லை. போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தி, மாவட்ட நிர்வாகமே, அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் பற்றாக்குறையால், அனைத்து வகையான தொழிலும் முடங்கியுள்ளன.
தொழிற்சாலைகள் செயல்படாத நிலையிலும், மின் கட்டணம் செலுத்தக் கோரி, மின் வாரிய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். பயன்படுத்தாத மின்சாரத்துக்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுபோன்று வசூலிப்பதை தடுக்க வேண்டும். இயங்காத காலத்துக்கு, 20 சதவீத மின் கட்டணத்துக்கு, 80 சதவீத கட்டணத்தை கூடுதலாக வசூலித்து உள்ளனர். இவ்வாறு, அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து, முதல்வர் பேசியதாவது: தமிழக மின் வாரியத்துக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,450 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மின் வாரியம் ஏற்கனவே, 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது. மின்சாரத்தை சேமித்து வைக்க இயலாது என்பதை அறிவோம். இருப்பினும், மின் கட்டணம் குறித்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். தளர்வுகளுக்குப் பின், தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க அனுமதி வழங்கியுள்ளோம்.
தமிழக அரசுக்கு ஏற்கனவே நிதிச்சுமைகள் உள்ளன.ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை, ஜவுளி என, இரண்டு பிரதான தொழில்கள் உள்ளன. இவற்றை மேம்படுத்த, அரசு முழு கவனம் செலுத்தும். இவ்வாறு, முதல்வர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE