சென்னை :''முருகரை பழித்துப் பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்பது, தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு. இவற்றை ஸ்டாலினும் கண்டித்துள்ளார்,'' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கூறினார்.அவரது பேட்டி:தமிழகத்தில், ஸ்டாலினுக்கு எதிராக, தவறான பிரசாரங்களை செய்ய, ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்படுகிறது.
மக்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு பெருகி வரும் ஆதரவை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், திட்டமிட்டு விஷம பிரசாரம் செய்கின்றனர். போலியாக, ஸ்டாலின் பெயரில், டுவிட்டர் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. அதில், முருகரை இழிவுபடுத்தி பேசியுள்ள கருப்பர் கூட்டத்திற்கு, தி.மு.க., ஆதரவு தெரிவிக்கும் என, ஒரு போலியான தகவலை ஸ்டாலின் பெயரில் பதிவிட்டுள்ளனர். இதை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது.முருகரை பழித்து பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்பது, தி.மு.க., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைப்பாடு; ஸ்டாலினும் கண்டித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் வருவதற்கு, சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஹிந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்கள், ஸ்டாலின் பின்னால் இருப்பதை, மத்திய அரசின் உளவுத்துறை வாயிலாக அறிந்துள்ளது.அதனால், ஹிந்துக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த, திட்டமிட்டே இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்த காலத்தில், கோவில்கள் பாதுகாக்கப்பட்டன; பல கோவில்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. தானே களமிறங்கி, மயிலாப்பூர் குளத்தை சீரமைத்தவர் கருணாநிதி. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடத்தவில்லை; மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். அமைச்சர் பாண்டியராஜன் சொல்வது போல, நீதிமன்ற அவமதிப்பாகாது. இவ்வாறு, ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
மின் கட்டணம் உயர்வு: ஸ்டாலின் பதிலடி
'மின் கட்டண கொள்ளையை பிடிவாதமாக நியாயப்படுத்தும், அ.தி.மு.க., அரசு, பழி முழுவதையும், மின் நுகர்வோரான மக்கள் மீது சுமத்துகிறது' என, முதல்வருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:மின்சார கணக்கீட்டு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், அவற்றை பகுப்பதில் ஏற்பட்ட கோளாறுகள் எல்லாமும் சேர்ந்து, மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருக்கிறது.இந்த விவகாரத்தை, தன் சொந்த அனுபவத்தின் வாயிலாக, பல துறை சார்ந்த பிரபலங்களும், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
பிரபலங்கள் முதல், சாதாரண சாமானியர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும், இந்த மின்கட்டண கொள்ளையை பிடிவாதமாக நியாயப்படுத்தும் அ.தி.மு.க., அரசு, பழி முழுவதையும், மின்நுகர்வோரான மக்கள் மீது சுமத்துகிறது.ம.பி., - கேரளா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், மின் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அ.தி.மு.க., அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில், கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டும் என, சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்காகும். ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில், அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும், ௨௧ம் தேதி, அனைத்து வீடுகளின் முன் கறுப்புக்கொடி ஏற்றி, கண்டன முழக்கம் எழுப்புவோம். பொதுமக்களிடம் ஆதரவு பெறும் வகையில், துண்டறிக்கைகள் வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE