'கொச்சி: : தங்க கடத்தலில் ஈடுபட்ட, கேரளாவைச் சேர்ந்த ஸ்வப்னா, சந்தீப் நாயர், சரித் குமார், பைசல் பரீத் ஆகியோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில் போலிஆவணங்கள் தயாரித்து, கடந்த ஓராண்டில், 200 கிலோ தங்கம் கடத்தியுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில்,ஸ்வப்னாவை பகடைக் காயாக பயன்படுத்தி, கேரள, வி.ஐ.பி.,க்கள், 'கேம்' ஆடியுள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, 5ம் தேதி, கேரளா வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சலை, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தங்க கடத்தல் திட்டத்துக்கு, சந்தீப் நாயர் மூளையாக செயல்பட்டுள்ளது, விசாரணையில் தெரிய வந்தள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில், 2014ல், 3.5 கிலோ தங்கம் பிடிபட்ட விவகாரத்தில், சந்தீப் நாயர் மற்றும் கே.டி.ரமீஸ் ஆகியோரை, போலீசார் கைதுசெய்தனர்.
வெள்ளோட்டம்
இதையடுத்து, தன் கடத்தல் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்ட சந்தீப், சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். இந்த நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியாற்றி வந்த, தன் நண்பர், சரித் குமாரை, கடந்த ஆண்டு சந்தித்தார். இருவரும், ஒரு தனியார் நிறுவனத்தில், ஏற்கனவே ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். சரித் குமார் மூலம், அவருடன் பணியாற்றி வந்த, ஸ்வப்னாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது, துாதரக பெயரை பயன்படுத்தி, துபாயில் இருந்து தங்கம் கடத்தும் திட்டம் குறித்து, இருவரிடமும், சந்தீப் விளக்கியுள்ளார். இதில் இருக்கும் ஆபத்துக்களை ஆராய, முதல்கட்டமாக, துபாயில் இருந்து, 'எமர்ஜென்சி' விளக்குகள், சாக்லேட்கள், பேரீச்சம் பழம் போன்ற பொருட்களை, திருவனந்தபுரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக பெயரில், கடந்த ஆண்டு ஜூனில், பார்சலாக அனுப்பி, வெள்ளோட்டம் பார்த்துள்ளனர்.இதில் சிக்கல் எதுவும் இல்லை என்று தெரிந்தவுடன், தங்க கடத்தலை, கடந்த ஆண்டே துவங்கி உள்ளனர். அந்த நேரத்தில், துாதரக மக்கள் தொடர்பு அதிகாரியாக, சரித் குமார் பணியில் இருந்தார். எனவே, துபாயில் இருந்து பார்சல் வந்தவுடன், துாதரகத்தில் இருந்து கடிதம் எடுத்துச் சென்று, அதை பாதுகாப்பாக வெளியே எடுத்துவந்துள்ளார்.
துாதரக பணியில் இருந்து அவர் விலகிய பிறகும், போலி ஆவணங்களை கொடுத்து, பலமுறை பார்சலை பெற்றுள்ளார். இவர்கள் எவ்வித பிரச்னையும் இன்றி, சுலபமாக தங்கம் கடத்தி வருவதால், இவர்களிடம் பல, 'ஹவாலா' ஏஜன்ட்டுகள் பணம் கொடுத்துள்ளனர்.அந்த பணம், துபாயில் உள்ள இவர்களது கூட்டாளியான, பைசல் பரீத்துக்கு அனுப்பப்பட்டு, அவர் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து, கேரளாவுக்கு பார்சல் அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.200 கிலோ தங்கம்ஒவ்வொரு முறை தங்கம் கடத்தப்பட்ட பின்னரும், சந்தீப் மற்றும் ஸ்வப்னா குழுவினருக்கு, பல லட்சம் ரூபாய், கமிஷனாக கிடைத்துள்ளது. சமீபத்தில் பிடிபட்ட, 30 கிலோ தங்க கடத்தலுக்கு, இவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் கமிஷன் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
'கொரோனா' ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும், 70 கிலோ தங்கத்தை, இவர்கள் கடத்தியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயரில், கடந்த ஓராண்டில் மட்டும், 20 பார்சல்களில், 200 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.'ஸ்வப்னாவை பகடைக் காயாக பயன்படுத்தி, கேரள வி.ஐ.பி.,க்கள் பலர், இந்த கடத்தல் நாடகத்தில், கோடிகளை குவித்துள்ளது, விரைவில் வெளிச்சத்துக்கு வரும்' என, அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
துாதரக போலீஸ் வாக்குமூலம்!
திருவனந்தபுரம்,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தில், பாதுகாப்பு போலீசாக பணியாற்றி
வந்தவர் ஜெய் கோஷ். கடத்தல் தங்கம் பிடிபட்ட அன்று, ஜெய் கோஷை, மூன்று முறை
தொடர்பு கொள்ள, ஸ்வப்னா சுரேஷ் முயற்சித்தது, விசாரணையில் தெரிய
வந்தது.இந்த கடத்தலில், போலீஸ்காரர் ஜெய் கோஷுக்கு தொடர்பு உள்ளதாக
கூறப்பட்டு வந்த நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த ஜெய்கோஷ், கடந்த,
16ல் மாயமானார்.
இவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில்,
திருவனந்தபுரத்தின் தும்பா என்ற இடத்தில் உள்ள, தன் வீட்டு அருகே, கை
மணிக்கட்டு உடைந்த நிலையில், படுகாயத்துடன், நேற்று முன் தினம்
மீட்கப்பட்டார். அவர், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெய்கோஷை, நேற்று நேரில் சந்தித்த
மாஜிஸ்திரேட், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதையடுத்து, போலீசார்
விசாரணையை துவங்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE