புதுடில்லி: சீனாவுடனான மோதலையடுத்து லடாக் எல்லை பகுதியில், பதற்றம் நிலவி வருவதால், ரபேல் போர் விமானங்களை அங்கு களமிறக்கி, எல்லை பகுதியை வலுப்படுத்த இந்திய விமானப்படை வியூகம் வகித்து வருகிறது.

பிரான்சிடமிருந்து 36 ரபேல் விமானங்களை சுமார் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியா வாங்க உள்ளது. இந்த ஆண்டு ஆறு விமானங்கள் வரும் நிலையில் வரும் 2022 ஆண்டிற்குள் எஞ்சிய ரபேல் விமானங்களும் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரபேல் முதல் தொகுப்பு
ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு வரும் ஜூலை 27ம் தேதி இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது.முதலில் 6 ரபேல் விமானங்கள் பிரான்ஸின் இஸ்ட்ரெஸில் இருந்து, அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த விமானங்களில் பொருத்தப்படக் கூடிய மெட்டோர், ஸ்கால்ப் ஏவுகணைகள் ஆகியன ஏற்கனவே இந்தியா வந்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் வந்தவுடன், 'கோல்டன் ஆரோஸ்' என்ற தனி ஸ்குவாட்ரன், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லடாக்கில் சீனாவுடன் தொடர்ந்து உரசல் நிலவி வரும் நிலையில், விமானப்படையின் சார்பில் வரும் ஜூலை 22 முதல் 24ம் தேதி வரை, டில்லியில் உயரதிகாரிகள் கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பாதாரியா இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். கூட்டத்தில் சீனாவுடனான தற்போதைய எல்லை நிலவரம், எல்லையில் வான் பாதுகாப்பை அதிகரிப்பது, புதிய போர் விமானங்கள் மூலம் ரோந்து பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும் எல்லையில் ரபேல் விமானத்தை களமிறக்குவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். மிராஜ், சுகோய் போர் விமானங்களுடன் ரபேலையும் களமிறக்குவது குறித்து ஆலோசிக்க உள்ளனர். ரபேலை 2 வாரங்களில் களமிறக்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும்.
லடாக்கில் தற்போது இரவு, பகல் என அனைத்து வேளைகளிலும் வான் எல்லையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய விமானப்படை மேற்கொண்டு வருகிறது. போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் மல்டி-மிஷன் சாப்பர்கள் இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. மேலும் மிக்-29, சுகோய்-30 போர் விமானங்கள், 'அப்பாச்சி ஏ.எச்-64 இ' தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் சி.எச்-47 எப்(ஐ) சினூக் மல்டி-மிஷன் ஹெலிகாப்டர்கள் மலைப்பகுதியில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.