திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் மூன்றாவது குற்றவாளியான பைசல் பரீத் துபாயில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, 5ம் தேதி, கேரளா வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சலை, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வழக்கின் 3வது குற்றவாளி பைசல் பரீத் துபாயில் இருந்நார். அவரை கைது செய்ய துபாய் போலீஸ் மற்றும் இன்டர்போல் உதவியை என்ஐஏ அதிகாரிகள் நாடியிருந்தனர். மேலும் அவர் வேறு எந்த நாட்டுக்கும் தப்பி விடாமல் இருக்க அபரது பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

இந்நிலையில், பைசல் பரீத்தை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாளை அவர் இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தினால், இவ்வழக்கில் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்வப்னா தோழியிடம் ரூ.15 லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது ஸ்வப்னாவின் பணம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.