ஒரே நாளில், 5 பேருக்கு தொற்று: அவிநாசி பொதுமக்கள் பீதி| Dinamalar

ஒரே நாளில், 5 பேருக்கு தொற்று: அவிநாசி பொதுமக்கள் பீதி

Added : ஜூலை 20, 2020
Share

அவிநாசி:அவிநாசியில், ஒரே நாளில், 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அவிநாசி, சேவூர் அருகேயுள்ள வடுகனுார் பகுதியை சேர்ந்த, 43 வயது ஆண் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது; அவரது தொடர்பில் இருந்தவர்களுக்கு, சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன், அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள தனியார் நகைக்கடையில் பணிபுரியும், பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடை உரிமையாளர், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் உட்பட, 54 பேரும் தனியார் மருத்துவமனையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பரிசோதனை முடிவு, நேற்று மாலை வெளியானது. இதில், தொழிலாளர் விடுதியில் தங்கி பணிபுரிந்து வரும், 47, 27, 21 வயதுடைய கடை செக்யூரிட்டிகள் மூன்று பேர், மற்றும், 17 வயதுடைய ஊழியர்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இதையடுத்து, அப்பகுதி முழுக்க அடைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 'சில நாட்கள் இப்பகுதி கடைகள் மூடப்படும்' என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். அவிநாசி பகுதிகளில், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X