ராஜஸ்தானில் இந்த வாரம் அசோக் கெலாட் அரசுக்கு.. பலப்பரீட்சை!| Dinamalar

ராஜஸ்தானில் இந்த வாரம் அசோக் கெலாட் அரசுக்கு.. பலப்பரீட்சை!

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Sachin Pilot, Ashok Gehlot, Rajasthan, ராஜஸ்தான், அசோக் கெலாட், சச்சின் பைலட், பலப்பரீட்சை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஆட்சியை காப்பாற்ற, காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. சட்டசபை கூட்டத்தை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க, முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ராஜஸ்தான் சட்டசபையின் கூட்டம், இந்த வாரத்தில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சியின் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டார். இதையடுத்து, காங்., கொறாடா உத்தரவுப்படி, முதல்வர் கெலாட் தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும் இரண்டு அமைச்சர்கள் உட்பட, 18 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்தனர்.

அதனால், துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும், சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரை ஆதரித்த இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து 'சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரையும், ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது' என, விளக்கம் கேட்டு, சபாநாயகர், சி.பி.ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.

நோட்டீசை ரத்து செய்ய கோரி, சச்சின் பைலட் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரஜித் மகந்தி மற்றும் பிரகாஷ் குப்தா அமர்வு முன், 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சச்சின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கொறடா உத்தரவு சட்டசபை நடக்கும் போது தான் பொருந்தும்' என, வாதிட்டார். இதை தொடர்ந்து, விசாரணையை, இன்றைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் மீது, நாளை மாலை, 5:30 மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதித்தனர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது போல், ராஜஸ்தானிலும் இழந்துவிடக் கூடாது என்பதில், காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதற்காக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து, சச்சின் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனு மீது, இன்று விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில், சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், ஆட்சியை பறிகொடுத்து விடக் கூடாது என்பதில், காங்., உறுதியாக உள்ளது.

அதனால், ராஜஸ்தான் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, அரசின் மீது, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர, முதல்வர் கெலாட் முடிவு செய்து உள்ளார். இதில், காங்கிரஸ் எம்.எல்,.ஏ.,க்கள் அனைவரும், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என, கட்சியின் தலைமை கொறடா உத்தரவு பிறப்பிப்பார். அப்போது, அரசுக்கு எதிராக, சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்வது எளிதாகி விடும் என, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து தான், கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை நேற்று முன்தினம் இரவு, முதல்வர் கெலாட், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலுடன் சந்தித்தார். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, கவர்னரிடம், கெலாட் கேட்டுக் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாகன் கூறியதாவது: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், 19 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், காங்கிரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், ராஜஸ்தான் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க, கெலாட் உறுதியாக உள்ளார். சட்டசபை கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக, கவர்னரிடம், 21ம் தேதிக்கு பின், கோரிக்கை விடுக்கப்படும். கெலாட் அரசுக்கு, எந்த ஆபத்தும் இல்லை. இவ்வாறு, மாகன் கூறினார்.


'கிங் மேக்கர்' கட்சி

'ராஜஸ்தானில் யார் ஆட்சி என்பதை முடிவு செய்யும், 'கிங் மேக்கர்' கட்சியாக நாங்கள் இருப்போம்' என, பாரதிய பழங்குடியினர் கட்சி தெரிவித்து உள்ளது. பாரதிய பழங்குடியினர் கட்சிக்கு, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இந்நிலையில், இக்கட்சியின் தலைவர், மகேஷ்பாய் வாசவா கூறியதாவது: எங்களுக்கு இரண்டு எம்.எல்,ஏ.,க்கள் தான் உள்ளனர். ஆனால், மாநிலத்தில் யார் ஆட்சி நடக்கும் என்பதை முடிவு செய்யும், கிங் மேக்கர்களாக உள்ளோம். சட்டசபை தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு எதிராக நாங்கள் போட்டியிட்டோம். பழங்குடியின மக்களின் நலனுக்காக நாங்கள் போராடி வருகிறோம்.

எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, முதல்வர் கெலாட் உறுதியளித்துள்ளார். அதனால், கெலாட் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.


வசுந்தரா மீது குற்றச்சாட்டு:

'குதிரை பேரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, சஞ்சய் ஜெயின், முன்னாள் முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜேவின் ஆலோசனைபடியே செயல்பட்டுள்ளார்' என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேந்திர குடா கூறியதாவது: அசோக் கெலாட் அரசை கவிழ்க்க, குதிரை பேரத்தில் பா.ஜ., ஈடுபட்டது, 'ஆடியோ டேப்' மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ஜெயின், எட்டு மாதத்துக்கு முன், என்னை சந்தித்தார். தன்னை, வசுந்தரா ராஜே அனுப்பியதாக தெரிவித்த ஜெயின், அவர் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்.

ஆனால், அதை நான் ஏற்கவில்லை. கெலாட் அரசை கவிழ்க்க, பல வகையிலும் பா.ஜ., முயற்சித்தது. குதிரை பேர விவகாரத்தில், வசுந்தராவுக்கு தொடர்பு உள்ளது. அவர் உத்தரவுப்படியே, சஞ்சய் ஜெயின் செயல்பட்டுள்ளார், அதனால், வசுந்தராவிடம் விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஷெகாவத் மீது ஆவேசம்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் மாகன், ஜெய்ப்பூரில் நேற்று கூறியதாவது: ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சியை கவிழ்க்க, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில், சதி நடந்துள்ளது. ஆட்சியை கவிழ்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மாவுடன் அவர் நடத்திய பேரம், 'ஆடியோ டேப்' வாயிலாக உறுதியாகிஉள்ளது. அந்த ஆடியோ டேப்பில் உள்ளது, தன்னுடைய குரல் இல்லை என, ஷெகாவத் கூறுகிறார்.

அப்படியென்றால், குரல் சோதனைக்கு செல்ல, அவர் தயங்குவது ஏன்? ஆட்சியை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதால், மத்திய அமைச்சர் பதவியை வகிக்க, கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு தேவையான பாதுகாப்பை, ஹரியானா, டில்லி மாநில போலீசார் வழங்கி வருகின்றனர்.

இந்த விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் எனும் நோக்கிலேயே, டெலிபோன் ஒட்டு கேட்பு என கூறி, சி.பி.ஐ., விசாரணைக்கு, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு, அஜய் மாகன் கூறினார். இதற்கிடையே, ஆடியோ டேப் விவகாரம் பற்றி, ராஜஸ்தான் தலைமைச் செயலரிடம், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X