மதுரை : ""ஆண்டுக்கு 4 கோடி ரத்த யூனிட் தேவைப்படுகிறது,'' என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்தயியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். உலக ரத்த தானத்தையொட்டி கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:
நம் உடலில் 10 யூனிட் ரத்தம் உள்ளது. ஒரு யூனிட்டை தானமாக கொடுப்பதில் தவறில்லை. இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் ரத்ததானம் செய்தால், ரத்தத்திற்கு தட்டுப்பாடு இருக்காது. ஆண்டுக்கு 4 கோடி ரத்த யூனிட் தேவைப்படுகிறது. தற்போது 40 லட்சம் யூனிட் மட்டுமே தானமாக பெறப்படுகிறது. இரண்டு வினாடிக்கு ஒருமுறை ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் 38 ஆயிரம் ரத்ததான முகாம் நடந்தால்தான், பற்றாக்குறையை சமாளிக்க முடியும். விபத்தில் சிக்கியவர்களுக்கு அல்லது சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நேரத்தில் ரத்தம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நவீன வசதிகள் மற்றும் கருவிகளுடன் ரத்த வங்கி அமைய வேண்டும். விபத்து நடந்த 30 நிமிடத்தில் ரத்தம் கிடைத்தால் பல உயிர்களை காப்பாற்றலாம் என்றார்.