திருப்பூர்:பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள செம்மொழி மாநாடு லோகோவை மறைக்க, பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் நடந்து வரும் கட்டுமான பணிகளையும், ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளையும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினியோகிக்க, தயாரிக்கப்பட்ட 1.35 கோடி புத்தகங்களிலும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு லோகோ கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதை மறைக்கும் வகையில் பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஸ்டிக்கர், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணி நடந்து வரும் காரணம்பேட்டை, வஞ்சிபாளையம், முதலிபாளையம் உள்ளிட்ட பள்ளிகளை, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யதுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆய்வின்போது, பள்ளிகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியையும் இணை இயக்குனர் கார்மேகம் பார்வையிட்டார். இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவ, மாணவியருக்கு உடனடியாக புத்தகம் வினியோகிக்கும் வகையில், காலதாமதமின்றி ஸ்டிக்கர் ஒட்டும் பணியை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.