மதுரை : மதுரையில் நேற்று குடிபோதையில் மினி பஸ்சை ஓட்டி, பயணிகளுக்கு அச்சம் ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்துவது அதிகரிக்கிறது. சில நாட்களுக்கு முன், தேனி மாவட்டம் கம்பத்தில் ஆம்னி பஸ்சை குடிபோதையில் ஓட்டிய டிரைவர் விபத்தை ஏற்படுத்தினார். இதேபோன்று விபத்து மதுரையில் நேற்று நடப்பதற்குள் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். நேற்று காலை மாட்டுத்தாவணியில் இருந்து வண்டியூருக்கு மினி பஸ் சென்றது. கே.கே.நகர் லேக்வியூ ரோட்டில் வந்தபோது, டிரைவர் பாலமுருகன்(28) அடிக்கடி "ஸ்டன் பிரேக்' போடுவதும், குறுக்கும், நெடுக்குமாக சென்று "எட்டு' போட்டும் பஸ்சை ஓட்டினார். மேலமடை செக்போஸ்ட் அருகே இதை கவனித்த போக்குவரத்து எஸ்.ஐ., ரமேஷ்குமார், பஸ்சை நிறுத்தினார். அப்போது, பாலமுருகன் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதையறிந்த பயணிகள் பாலமுருகனை அடிக்காத குறையாக கண்டித்துவிட்டு, இறங்கினர். பின், அவர் கைது செய்யப்பட்டார். பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.