பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஆத்தூர்: மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வர வாய்ப்புள்ளதால், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்தலாம்.


இதுகுறித்து, தலைவாசல் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி(பொ) கூறியதாவது: தலைவாசல் வட்டாரத்தில், கடந்த ஆண்டு, 9,920 ?ஹக்டேரில், மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, பரவலாக மழை பெய்வதால், காரீப் பருவத்தில், மக்காச்சோளம் பயிர் செய்ய தயாராக உள்ளனர். மழையை பயன்படுத்தி, கோடை உழவு பணி மேற்கொள்ள வேண்டும். இதனால், மண்ணில் உள்ள படைப்புழுவின் கூட்டுப்புழு அழிக்கப்படுகிறது. கடைசி உழவின்போது, ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம், 'பேவேரியா பேசியானா' உயிரி பூச்சிக்கொல்லியை விதை நேர்த்தி செய்து, அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும். அப்போது, மானாவாரி பயிருக்கு, 45 செ.மீ.,க்கு, 25 செ.மீ., என்ற இடைவெளியிலும், இறவை (பாசனம்) பயிருக்கு, 65 செ.மீ.,க்கு, 25 செ.மீ., இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். மேலும், 10 வரிசைக்கு, 75 செ.மீ., இடைவெளி விட்டு விதைப்பது அவசியம். நிலத்தில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்க, தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள், ஆமணக்கு, சோளம், சாமந்தி போன்ற பயிர்களை, வரப்பு பயிர்களாக சாகுபடி செய்யலாம். தவிர, உளுந்து, பாசிப்பயிறு போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். விதைத்த, மூன்று முதல், ஐந்து நாளில், ஏக்கருக்கு, ஐந்து இன கவர்ச்சி பொறிகளை வைத்து, தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்க வேண்டும். பயிரில் தென்படும் முட்டை குவியல், இளம் புழுக்களை, அவ்வப்போது சேகரித்து அழிக்க வேண்டும். படைப்புழு தாக்குதல் அதிகம் இருப்பின், வேம்பு கலந்த தாவர பூச்சிக்கொல்லியான 'அசாடிராக்டின்' அல்லது, 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும். இளம் புழுக்களை கட்டுப்படுத்த, 'மொட்டாரைசியம் அனிசோபிலே' அல்லது, 'பெவேரியா பேசியானா' போன்ற உயிரி பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும். மக்காச்சோள படைப்புழுவின் தாக்குதல் அதிகம் இருப்பின், விவசாயிகள், வேளாண் துறையினரால் பரிந்துரைத்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை, விழிப்புடன் கையாண்டு, மக்காச்சோள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி, விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X