மும்பை : 'ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை, பண பலம் மூலம் கவிழ்க்க முயற்சிப்பது, அரசியலமைப்பிற்கு எதிரானது; மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்' என, சிவசேனா சாடியுள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக, துணை முதல்வர் சச்சின் பைலட், போர்க்கொடி துாக்கியுள்ளார்.
பெரும் பரபரப்பு
இதற்கிடையே, சமூக வலைதளங்களில், 'ஆடியோ' ஒன்று பரவியது. அதில், கெலாட் அரசை கவிழ்ப்பது தொடர்பாக, பைலட் ஆதரவு, எம்.எல்.ஏ., பன்வர்லால் சர்மாவுடன், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நடத்திய பேச்சு இடம் பெற்றிருந்தது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து விமர்சித்துள்ள சிவசேனா, கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான, 'சாம்னா'வில் கூறப்பட்டுள்ளதாவது: தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவே, காங்., அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக சச்சின் பைலட் கூறி வருகிறார். அதில் துளியும் உண்மை இல்லை என்பதை, முதல்வர் கெலாட் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். பா.ஜ.,வுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே, பணப் பரிமாற்றம் நடக்கும் அளவிற்கு, பேச்சுவார்த்தை நடந்து வருவது தெரிய வந்துள்ளது.
மிகப்பெரிய குற்றம்
இதிலிருந்து, குதிரை பேரம் மூலம், அரசை கவிழ்க்க சதி நடப்பது தெளிவாக தெரிகிறது. தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது என்பது குற்றச் செயலாகும்; அது, தனிநபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். அதேபோல், ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, பண பலத்தின் மூலம் கவிழ்க்க முயற்சிப்பது, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான செயல்; மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இந்த இரண்டு குற்றங்களில், எது மிகப்பெரிய குற்றம் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம்.
இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக, ஆதாரங்களுடன், மத்திய அமைச்சர் ஷெகாவத் மீது, கெலாட் அரசு புகார் அளித்து உள்ளது. எனினும், அவர் மீதான புகார்கள் குறித்து, பா.ஜ., வாய் திறக்காதது ஏன்... ராஜஸ்தானில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரும் நபர்கள், மத்திய அமைச்சர் ஷெகாவத்தை ராஜினாமா செய்ய, உத்தரவிடாமல் இருப்பது ஏன்... முதலில், ஷெகாவத்தை நீக்குங்கள்; அதன்பின், கெலாட் அரசு மீது குற்றம் சுமத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE