ஈரோடு : ஈரோட்டில், ஈ.வெ.ரா., சிலைக்கு, காவி துண்டு அணிவிக்க வந்த, இந்து மக்கள் கட்சி நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.
கோவையில், ஈ.வெ.ரா., சிலை மீது, காவி வர்ணம் பூசப்பட்டதால், ஈரோடு பார்க் பகுதியில் உள்ள, ஈ.வெ.ரா., சிலைக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி, ஈரோடு மாவட்ட தலைவர் பிரகாஷ், 44, பார்க் பகுதிக்கு, நேற்று வந்தார். ஆடி அமாவாசையில், திதி கொடுப்பவர் போன்று, வேட்டி கட்டியிருந்த அவர், சட்டை அணியாமல், வெள்ளை துண்டை, மார்பை மறைத்து போர்த்தியிருந்தார்; அதற்குள் காவி துண்டை மறைத்து வைத்திருந்தார்.
திடீரென சிலையை நோக்கி ஓடி, துண்டை அணிவிக்க முயன்றார். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த, ஈரோடு டவுன் போலீசார், அவரை தடுத்து, குண்டுகட்டாக துாக்கி, கைது செய்து, ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். அப்போது அவர், 'வெற்றிவேல், வீரவேல், பழநி ஆண்டவருக்கு அரோகரா' என, கோஷமிட்டபடியே சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE