பொது செய்தி

தமிழ்நாடு

புத்துயிர் பெறுமா வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகள்...

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி, ஜூலை 21-ஆண்டிபட்டியில் தொழில்துறை மேம்பாட்டிற்கு ரூ.96 கோடியில் 16 ஆண்டிற்குமுன் துவங்கப்பட்ட வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகள் மீண்டும் புத்துயிர் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு மூலம் தமிழகத்தில் பல்லடம், குமாரபாளையம், வாடிப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் தொழில்துறை மேம்பாட்டிற்காக உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா உருவாக்கப்பட்டது. ரூ. 96 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு 2004 ல்
ஜெ., முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்.


45 ஏக்கர் நிலம்


திட்டத்தை செயல்படுத்த ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது. ஏற்றுமதி ஜவுளி தயாரிப்புக்காக பல்வகை தொழிற்கூடம், உள் கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு முதல் தவணையாக ஒதுக்கிய ரூ. 2.44 கோடியில் 7 ஷெட்டுகள் அமைக்கப்பட்டன. உள் கட்டமைப்பு விரிவாக்க பணிகளுக்கு மாநில அரசு ஒதுக்கிய மானியம் ரூ. 4.37 கோடி வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் திட்டத்திற்கான உள் கட்டமைப்பு பணிகள் துவங்கி நடந்து வந்தது. இச்சூழலில் முதலீட்டாளர்களும், உள் கட்டமைப்பில் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என திட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதனை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை.


தொய்வு

இதனால் தொய்வு ஏற்பட்டு சில மாதங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் முதலீட்டாளர்கள் பலர் இதில் இருந்து விலகிக்கொண்டனர். இருப்போருக்கும் வங்கிகள் தனி நபர் கடன் வழங்க முன்வரவில்லை. ஒவ்வொரு முறை மத்திய, மாநில ஆட்சி மாற்றத்திற்கு பின்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.

எனவே மத்திய, மாநில அரசுகளின் தொழில் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்னைகளை களைந்து ஆண்டிபட்டியில் இத்திட்டம் நிறைவேறுவதற்கான ஆலோசனை, உதவிகள் வழங்க வேண்டும். திட்டம் செயல்பட்டால் 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X