மதுரை மண்ணே மணக்கும் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று மதுரை மல்லி. 'ஜாஸ்மினம் கிரிபித்தியை' என்னும் தாவர பெயரைக் கொண்ட மல்லிகையை ஆங்கிலத்தில் 'ஜாஸ்மின்' என்று அழைக்கிறோம்.
'பூ... இவ்வளவு தானா!' என்று சர்வ சாதாரணமாக மதுரை மல்லியை சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஒரு மனிதனின் பிறப்பு, இறப்பு, வாழ்வு, காதல் என அனைத்து நிலைகளிலும் பூக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.பூக்கள் இந்திய கலாசாரத்திலும் பண்பாட்டு விழுமியங்களிலும் இணைந்த பெருமை கொண்டது. உலகில் அதி அற்புதமான பூக்களில் மல்லிகைப்பூவுக்கு சிறந்ததொரு இடமுண்டு. பல மலர்கள் பல்வேறு அழகு நிறங்களைக் கொண்டதாக உள்ளது.
ஆனால் மல்லிகைப்பூ வெண்மை நிறம் கொண்டுள்ளதால் துாய்மை, அமைதி, ஆர்வம் ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. பூக்களின் வாசத்தை அவ்வளவு சாதாரணமாக எவராலும் கடக்க முடியாது. பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையான மணம் உள்ளதா என பாண்டிய மன்னனையே சிந்திக்க வைத்ததல்லவா?
மனதை கவரும்:
மல்லிகை வாசத்துக்கு மயங்காத பெண்கள் வெகு குறைவு. அதிலும் பிறமாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வரும் என்னைப் போன்ற பெண்களுக்கு உருவத்தில் பெருத்து, பருத்து, உருளையாக கண்ணைப் பறிக்கும் வெண்மையில் நெருக்கமாக கட்டிவைத்திருக்கும் மல்லி மனதை கவர்வதோடு கவனத்தையும் ஈர்க்கிறது. மதுரை மல்லியின் மணமே ஊரைக் கூட்டும். அடுக்கான செண்டு போல் நெருக்கி கட்டியிருந்த பாங்கு கொள்ளை அழகு. இரவில் வாங்கி விடியலில் எங்களூருக்கு வந்து பிரித்து பார்த்தாலும் வாடவே இல்லை.
தலையில் சூடிக்கொண்டு செல்கையில் 'எந்த ஊர் மல்லி இது'என தெரிந்தவர் வாய்பிளந்து கேட்கத் தவறவில்லை. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லாதது போல மதுரை மல்லிக்கு அடைமொழிகள் தேவையில்லை. அதன் அருமை உலகறியும். சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு மதுரை மல்லி ஏற்றுமதி செய்யப்படுவது பெருமைக்குரிய விஷயம் தானே! மீனாட்சி அம்மனுக்கு இரவில் நடக்கும் மூக்குத்தி பூஜையில் மல்லிகை கட்டாயம் இடம்பெறுவதும் வெகுசிறப்பு.
தலைக்கு குளிர்ச்சி:
பொதுவாகவே பூக்களை பார்ப்பதும் சூடுவதும் மனதுக்கு நன்மை தரும். மல்லிகை உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடியது. இரவினில் பூக்கும் மல்லிகை, மூளையின் கீழ் பகுதியின் உருவாகும் வெப்பத்தை குறைத்து தலையை குளிர்ச்சியடையச் செய்யும். மேலும் கணவன் மனைவி உறவுக்குள் நேசத்தையும் அதிகரிக்கும். 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோஎன் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ' என்னும் திரைப்படப் பாடல் இந்த நேசத்தை, காதலை அழகாக படம்பிடித்துக் காட்டும்.
பூக்களில் இருக்கும் பிராண ஆற்றலானது, மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் சீராக வேலை செய்ய உதவுகிறது. இத்தனை அபார நன்மைகள் உள்ள பூக்களை இந்த கொரோனா காலத்தில் பெண்கள் சூடுவதே அரிதாகிவிட்டது. கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்வுகள் அருகிப் போன இந்த கொடிய நாட்களில் மல்லிகை சூடுவதை கூட மறந்து போனதாக சில மதுரை தோழிகள் பகிர்ந்தார்கள். மதுரை என்று இல்லை, தமிழகம் முழுவதுமே இது தான் நிலைமை.
விற்பனை சரிவு:
கொரோனா என்னும் கொடுங்கோலனிடமிருந்து தப்பிக்க வழிகோலும் இந்த வீடடங்கு நாட்களில் பெரும்பான்மை பெண்கள் வெளியே செல்வதில்லை. பூ வரத்தும் விற்பனையும் வீழ்ச்சி பெற்றுவிட்டது. விற்பனை பாதித்துள்ளதால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். சில இடங்களில் டிராக்டரால் பூக்களை உழுது உரமாக்கி வருவதை அறிய வேதனையாக இருக்கிறது. கொரோனா பீதியில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரிவதில்லை!
இருப்பினும் பூக்களைக் கொண்டு நாம் பின்பற்றக்கூடிய நடைமுறைகளை விட நாம் தவறவேண்டாம். மாயங்களாலும் தந்திரங்களாலும் சாதிக்க முடியாதவற்றைப் பூக்கள் கொண்டு நன்முறையில் சாதிக்கலாம் என்று ஆன்றோர்கள் அருளியுள்ளார்கள்.
நற்சிந்தனைகள்:
பூக்களின் நறுமணம், அவ்வப்போது நற்சிந்தனைகளை, நல்எண்ணங்களை எழுப்பும். எனவே பூக்களின் இடையே வாழ்தலே நன்று. கோயில் பூப்பிரசாதம் கையில் இருந்தால் தீய சக்திகள் ஒரு போதும் அண்டாது. இது காப்பு ரட்சையாயும் செயல்படும். மகான்கள் பூக்கள் மூலம் ஆசிர்வாதம் செய்வர். காரணம் அவர்களுடைய ஆசியை நேரடியாகப் பெறும் யோகசக்தி, மனப் பக்குவம் நமக்கு இல்லாததால் இடையில் புனித சக்தி நிறைந்த பூக்கள் பயனாகின்றது.
நமக்கு விருப்பமான கடவுளை மனதார மலர்களைக் கொண்டு பூஜித்து வழிபட்டால் இறைவன் அருள் கிடைக்கும். தான் சூடிக் கொடுத்த மலர் மாலையின் மூலம் பக்தியையும் அன்பையும் இறைவனிடம் சேர்ப்பித்த ஆண்டாள் நாச்சியார் பற்றி நாம் அறிந்ததே! இறைவனுக்கு மிகவும் பிடித்தது, தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வது. இறைவனை பூக்கள் கொண்டு பூஜை செய்வதற்கும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் சுகதுக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆன்மிகம் சொல்கிறது. சீரும் சிறப்புமாக தற்போது வாழ்ந்து வருபவர்களை காண நேர்ந்தால் சென்ற பிறவியில் இறைவனுக்கு நல்ல மலர்களை கொண்டு பூஜை செய்திருப்பார்கள் என்று சொல்வார்கள்.
வீடு தேடி வந்த கண்ணன்:
மதுராவில் சுதாமா என்பவர் பூமாலை கட்டி விற்கும் தொழிலைச் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் 'கண்ணா உன்னை எப்பொழுது காண்பேனோ' என்று ஏங்கிக்கொண்டே மாலை கட்டுவார். பூக்களின் வாசத்தை நுகர்ந்துவிடக்கூடாது என முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டே மாலை தொடுப்பாராம். மதுராவின் இளவரசன் கண்ணன், பூக்களின் வாசத்தால் ஈர்க்கப்பட்டு சுதாமா வீட்டு படியேறினான். சுதாமா தன் கையால் கண்ணனுக்கு மாலைகளை சூட்டி மகிழ்ந்தார். அவருக்கு பிரதியுபகாரமாய் தான் என்ன தருவது என்று நினைத்த கண்ணன், மோட்சகதி அளித்ததாக வரலாறு உண்டு.
வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். மல்லிகைக்கும் அந்த குணம் உண்டு என்பதில் பெருமிதம். 'புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு. நீருண்டு' என்பது திருமுறை வாக்கு. வசதி உள்ளவர்கள் வீட்டில் தோட்டம், நந்தவனம் அமைக்கலாம். அதில் மலரும் பூக்களை பறித்து இறைவனுக்கு பூஜிக்கலாம். பெண்களும் சூடலாம். மங்கையர்கள் கூந்தலில் மல்லிகை சூடினாலே அங்கு மகிழ்ச்சி தங்கும்.
ஒவ்வொரு பூவும் மணத்தால், வண்ணத்தால் ஆனந்தம் தந்து கடைசியில் தானே காய்ந்து ஒரே நாளில் முக்தியும் அடைந்துவிடும். மன அழுத்தத்தை நீக்கும் மாமருந்தான பூக்களை இயன்றவரை அதிகளவில் பயன்படுத்துவோம். அது பரவச் செய்யும் நேர்மறை எண்ணங்களில் உளம் மகிழ்வோம். நிம்மதியடைவோம். ஊரும் உலகமும் முடங்கிப் போனாலும் பூக்களைக் கொண்டு நம் இல்லத்தில் புத்துணர்ச்சியை பரவச் செய்ய முடியும். வாடிய நம் எண்ணங்களை அது நிச்சயம் மாற்றி மலர்த்தும். மல்லிகை போல் நம் வாழ்க்கையும் மலர்ந்து மணம் வீசட்டும்!
-பவித்ரா நந்தகுமார், எழுத்தாளர், ஆரணி,
94430 06882