இந்தியா

தீர்மானம்: கவர்னர் உரையை நிறுத்தி வைத்து...சட்டசபையில் சபாநாயகர் அதிரடி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி, ஜூலை 21-பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்கு கவர்னர் கிரண்பேடி வராததால், கவர்னர் உரையாற்றும் நிகழ்வை நிறுத்தி வைத்து புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

.புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி (நேற்று) துவங்கும் என்றும், காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையாற்றுவார், தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, புதுச்சேரி சட்டசபை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.இந்நிலையில், சட்டசபை கூடுவதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் இரவு, கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். கடிதத்தில், 'பட்ஜெட் விபரங்களும், துறைவாரியான நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்களும் எனக்கு அனுப்பப்படவில்லை. இது, விதிமீறலாகும். எனவே, பட்ஜெட் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடு விபரங்களை அனுப்பினால், சட்டசபையை வேறு தேதியில் கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்யலாம். நானும் உரையாற்றுகிறேன்' என தெரிவித்து இருந்தார்.கவர்னரின் கடைசி நேர கடிதத்தால் அதிருப்தி அடைந்த முதல்வர், சட்டசபைக்கு கவர்னர் வந்து உரையாற்றினாலும், உரையாற்றாவிட்டாலும், ஏற்கனவே அறிவித்தப்படி பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்தார்.அதன்படி, நேற்று காலை 9:30 மணிக்கு சட்டசபை கூடியது. கவர்னரை வரவேற்க சிவப்பு கம்பளம் விரித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், கவர்னர் கிரண்பேடி சட்டசபைக்கு வரவில்லை. காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன், 'சட்டசபைக்கு கவர்னர் வராத காரணத்தால், அவரது உரையை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி வழிமொழிந்தார். தீர்மானத்தின் மீது குரல் ஓட்டெடுப்பு நடத்திய சபாநாயகர் சிவக்கொழுந்து, பெரும்பான்மையானவர்கள் ஆதரித்ததால் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.தொடர்ந்து, சபாநாயகர் சிவக்கொழுந்து பேசும்போது, '20ம் தேதியன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்தவும், தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதனை, கவர்னரின் தகவலுக்காக அனுப்பப்பட்டது. மேலும், சட்ட சபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக ஒப்பு தல் கேட்டும் கோப்பு அனுப்பப்பட்டது. இந்த இரண்டு கோப்புகளுக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டார். மான்யக் கோரிக்கைகள் குறித்த விபரங்கள் சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் குழுவால் முடிவு செய்து கவர்னருக்கு அனுப்பப்படும். இந்நிலையில், மான்யக் கோரிக்கைகள் மற்றும் பட்ஜெட் விபரங்களை தனது ஒப்புதலுக்கு அனுப்பவில்லை என்றும், அவைகள் கிடைக்கும்பட்சத்தில் சபையில் உரை நிகழ்த்தவும், பட்ஜெட் சமர்ப்பிக்கவும் வேறு ஒரு புதிய தேதியை தருவதாகவும் கவர்னர் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் அனுப்பிய பதில் கடிதத்தில் பட்ஜெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டது என்றும், கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பட்ஜெட் சமர்ப்பிப்பது மேலும் தாமதப்படுத்துவது ஒட்டுமொத்த பொதுமக்களையும் பாதிப்படைய செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.புதுச்சேரி சட்டசபை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 1966ன் கீழ் விதி எண் 21ன்படி ஆட்சியாளர் உரை இடம் பெற வேண்டும்.

ஆனால், சட்டசபைக்கு கவர்னர் வராத காரணத்தால், விதி எண் 309ன்படி, விதி எண் 21யை தற்போது நிறுத்தி வைக்கிறேன். மதியம் 12:05 மணிக்கு சபையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சமர்ப்பிப்பார். அதுவரை சட்டசபையை ஒத்தி வைக்கிறேன். இவ்வாறு, சபாநாயகர் கூறினார்.தொடர்ந்து, மதியம் 12:05 மணிக்கு சபை கூடியதும், பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X