'இதற்கெல்லாம் அனுமதி வேண்டுமா; எந்த சிகிச்சை பலனளிக்கிறது என அறிந்து, அதை பின்பற்ற வேண்டியது தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:
கொரோனா நோயாளிகளை, ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தால், அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது.
'இன்னும், 10 நாட்களில் தான், ஊரடங்கு முடிந்து, இயல்பான வாழ்க்கை துவங்கப் போகிறதே; கொஞ்சம் பொறுத்திருங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
சாலை வரி, சுங்க வரி, மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக, எளிய மக்களால் வாடகை வாகனத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல், கைவிடும் சூழலே நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுனர்களின் குடும்பங்கள் பசியில் வாடுகின்றன.
'நீதித்துறை செயல்பாடு, எவ்வளவு, 'வேகத்தில்' இருக்கிறது என்பதற்கு, உங்கள் பேச்சு உதாரணமாக இருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி பேச்சு:

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டமான, கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரை கிராமத்தில் பிறந்தேன். எனக்கு, 2 வயதாக இருந்த போது, தந்தை விபத்தில் இறந்து விட்டார். இழப்பீடு கோரி, என் தாய் தொடர்ந்த வழக்கில், இறுதி வரை இழப்பீட்டு தொகை கிடைக்கவே இல்லை.
'உண்மை தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேட்டி:
கொரோனா வை ஒழிக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
'கண்டிப்பது போல, காங்கிரஸ் குசும்பை காட்டுகிறீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் அறிக்கை:
கந்த சஷ்டி கவசத்தை ஒரு அமைப்பினர் கொச்சைப்படுத்தியதற்கு, கடந்த, 17ம் தேதியே கண்டனம் தெரிவித்திருந்தேன். ஆனால், பா.ஜ.,வின், எச்.ராஜா ஏதோ, பா.ஜ.,வும் ஹிந்து அமைப்புகள் மட்டும் கண்டனம் தெரிவித்ததாக கூறியுள்ளார். எல்லாவற்றிலும் முந்திக் கொள்ளும் ராஜா, இதில் ஏன் அமைதி காத்தார் என, பா.ஜ.,வினரே வினவினர். தமிழக, பா.ஜ., தலைவர் பெயர் முருகன் என்பதால், அமைதியாக வேடிக்கை பார்த்தாரோ என்னவோ!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE