பொது செய்தி

தமிழ்நாடு

துணிச்சலின் நாயகர் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
 துணிச்சலின் நாயகர், தினமலர் நிறுவனர், டி.வி.ஆர்.

துணிச்சலின் நாயகர் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். இன்று அவரது நினைவு நாள்

தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் 36 வது நினைவு நாள் இன்று.அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் நடைபோடும் நாங்கள் எங்களை புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது அவரது சரிதத்தை சொல்லும் கடல் தாமரை புத்தகத்தை எடுத்து படித்துக் கொள்வோம்.பன்முக மாமனிதரான அவர் பத்திரிகை தொழிலில் சந்தித்த பல சம்பவங்களில் துணிச்சலை சொல்லும் ஒரு சம்பவத்தை இங்கே இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு முன் நடந்தது ஆனால் படிக்கும் போது நேற்று நடந்தது போன்ற விறுவிறுப்புடன் அமைந்துள்ளது.

திருநெல்வேலி நகரை குலுக்கிய ஒரு பெரும் கலவரம் டிச., 21, 1972 முதல் தொடர்ந்து சில நாட்கள் நடைபெற்றுள்ளது. நெல்லை நகரைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்குப் பின், இது போல ஒரு சம்பவம் நடைபெற்றதில்லை.வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் மார்ச் 12, 1908ல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 13ம் தேதி நெல்லையில் ஒரு பெரும் கலவரம் நடைபெற்றது. கூடுமானவரை 1908லும், 1972லும் நடைபெற்றவை ஒரே மாதிரியான கலவரங்களே. இரண்டுமே தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்தவை. முதல் கலவரத்தில் தேசிய உணர்வு காணப்பட்டது. இரண்டாவது கலவரத்திற்கு போலீஸ் அதிகாரியின் ஆணவம் தான் காரணமாக இருந்தது. முதல் கலவரத்தைத் துணிந்து பதிவுசெய்து முழு விபரங்களையும் பாரதி தனது, 'இந்தியா' பத்திரிகையில் வெளியிட்டார். இரண்டாவது கலவரத்தில் செய்திகளை முழுமையாக வெளியிட்டுப் பெரும் பாராட்டுக்கும், இன்னலுக்கும் ஆட்பட்டது, 'தினமலர்' மட்டுமே.

நவம்பர் 20ம் தேதி அன்று சவேரியார் கல்லுாரியின் பேராசிரியர் சீனிவாசன் என்பவரைப் போலீசார் வீடு புகுந்து தாக்கி, அவரது இரண்டு சகோதரர்களையும் அடித்து உதைத்து, மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரு வழியாக இழுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் மறுநாள் விஸ்வரூபம் எடுத்தது காரணம்,மறுநாள் 'தினமலர்' இதழில் முதல் பக்கம் முழுவதும் இந்தச் செய்திகள் பரபரப்பாகப் படங்களுடன் துணிச்சலுடன் வெளியிடப்பட்டது.

பேனர் தலைப்பே அதுதான்
கல்லுாரி ஆசிரியரை அடித்து இழுத்துச் சென்றார்கள்
போலீஸ் ஸ்டேஷன் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
போலீசார் இருவர் சஸ்பெண்ட்
நடந்தது என்ன? பாளை இன்ஸ்பெக்டர் ராஜசேகரனது இரண்டு மகள்களின் உடைகள் பற்றிப் பேராசிரியர் கேலி பேசியதாக வீட்டில் கூற, குழந்தைகளின் தாயார் அதை உண்மையாகக் கருதி, வீட்டுக் காவல் போலீசாரை ஏவ, அவர் பேராசிரியரை உதைத்து இழுத்துப் போயிருக்கிறார். அடித்த அடியில் பேராசிரியர் பல் உடைபட்டது. பேராசிரியரது சகோதரர்கள், 'ஏன்' என்று கேட்க, அவர்களுக்கும் சரியான அடி, உதை. சம்பவம் நடந்த பின், இதைக் கேள்விப்பட்ட இன்ஸ்பெக்டரும் நிதானம் தவறி, ஸ்டேஷனில் பேராசிரியரை மேலும் அடித்துத் தீர்த்துள்ளார். பேராசியருக்காக வாதாடியவர் வழக்கறிஞர் பாளை சண்முகம்.

மறுநாள் நகரின் எல்லாக் கல்லுாரிகளும், பள்ளிகளும் அடைக்கப் பட்டன. ஒரே பதற்றம். மாணவர்கள் கறுப்புச் சின்னமணிந்து ஊர்வலமாகப் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியாயம் கேட்கச் சென்றனர். எஸ்.பி., குருவையா ஸ்தலத்திற்கு வந்து சமாதானம் பேசினார்; பயன் இல்லை. மாணவர்கள் மீது போலீசார் கல் வீசினார்கள். கலவரம் தொடர்ந்தது. இதன் காரணமாக இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அடுத்த நாள், கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்கள் பெரும் ஊர்வலமாகச் சென்றனர். மனுவைக் கொடுக்க விடாமல் மாணவர்களைப் போலீசார் விரட்டியதில் லுார்து நாதன் என்ற கல்லூரி மாணவர் இறந்தார்.

காலை 10 மணி முதல் நகரில் முழுக் கடை அடைப்பு, போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு, போலீசார் எங்கு எப்போது யாரைத் தாக்குவார்களோ எனப் பயந்து சாலைகள் அனைத்தும் பெரும் கற்கள், டின்களை வைத்துத் தடை உண்டாக்கினர். மக்களைக் கண்டு போலீசார் பயந்தனர். அவர்கள் வீடு செல்ல முடியாத நிலை. . இந்த விவரங்களைப் படங்களுடன் பெரிய அளவில் பேனர் செய்தியாகத் மறுநாளும் 'தினமலர்' வெளியிட்டது.

மாணவர் லுார்துநாதன் சேலத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் சேலம் சென்றது. சேலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர். கண்டனக் கூட்டம் நடைபெற்றது. நாகர்கோவிலில் பதற்ற நிலை. திருச்சி, மதுரை மட்டுமல்லாது தமிழகமெங்கும் பரவியது. துப்பாக்கி சூட்டில் தலைமை போலீசார் ஏ.ஆர்.சங்கர பாண்டியன் காயமடைந்தார்.

துப்பாக்கியால் கலவரக்காரர்களைச் சுட்டதாகப் போலீசார் கூறினர். உண்மையில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டி, அனுமதி பெறாமலே கிடங்கில் இருந்த துப்பாக்கிகளை அவசரம் அவசரமாக எடுத்தபோது ஒரு துப்பாக்கி வெடித்துதான் போலீஸ்காரர் காயம்பட்டார் . தி.மு.க., வில் இருந்து அப்போதுதான் வெளியேறிய எம்.ஜி.ஆர்., இதைப் பலமாக கண்டித்து அறிக்கை விட்டார். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டார். முதல் அமைச்சர் கருணாநிதி வீட்டிற்கு 10 ஆயிரம் மாணவர்கள் ஊர்வலமாகச் செல்ல சென்னையில் அறிவிக்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி வழக்கம் போல பேராசிரியர், மற்றும் போலீசார் இருவர் மீதும் குற்றம் இருப்பது போல் ஒரு அறிக்கை விட, பிரச்னை மேலும் வலுத்தது. பாளையில் பெரும் பதற்றம். இரண்டு மூன்று நாட்கள் கடை அடைப்பு. மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. போலீசார் வெளியில் தலைகாட்ட அஞ்சினர். இதில், 'தினமலர்' நடுநிலையுடன் தைரியமாக செய்திகளை முழுமையாகத் தனித்தனி தலைப்புடன் பிரசுரித்தது. இறந்த போலீசார் படம், அவரது வாழ்க்கை வரலாறு, அவரது மனைவிக்கு ஐ.ஜி., அருள் கொடுத்த 4,000 ரூபாய் உதவித் தொகை ஆகியவற்றைப் படத்துடன் வெளியிட்டது.

இந்த சம்பவத்தில் வக்கீலாக மட்டுமல்லாமல், சர்வகட்சிக் குழுவின் அமைப்பாளராகவும் செயல்பட்ட பாளை சண்முகம் செய்தியில் காணப்படாத விவரங்களைக் கூறுகையில்..
எந்தக் குற்றமும் செய்யாத பேராசிரியரை நடுத்தெருவில் அடித்து இழுத்துச் சென்றனர். போலீசார், சிறு பிள்ளைகள் சொன்னதை உண்மை என்று எடுத்தது முதல் தவறு. பின்னர் இதை ஆயுதப் போலீசார் தங்களின் கவுரவப் பிரச்சனையாகக் கருதி களத்தில் இறங்கினர் இது அடுத்த தவறு. 'தினமலர்' மட்டுமே முழு விவரங்களையும் மிக்க நடுநிலையில் பிரசுரித்தது.

ஆனால் இதைத் தமிழகம் முழுவதும் பெரும் பிரச்னையாக்கியது, 'தினமலர்'தான் என்று எண்ணிக்கொண்டிருந்த போலீசாருக்கு பயங்கரக் கோபம்.சட்டம் ஒழுங்கு முழுவதும் பாதிக்கப்பட்டது. நானும் (பாளை சண்முகம்), அன்றைய எம்.எல்.ஏ., கே.டி.கோசல்ராமும் மாலையில் லைட்னிங் கால் போட்டு, ஐ.ஜி.அருளிடம் உடனே அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்யச் சொல்லி கேட்டோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் போனில் கூறினார். நடவடிக்கை வரும் வரை மறுநாள் காலை 4 மணி முதல், போலீஸ் ஸ்டேஷன் முன் நாங்கள் உண்ணாவிரதமிருப்பதாகக் கூறினோம். நிலைமை மேலும் மோசமாகும் என்றுணர்ந்த அருள், உடனே விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டரை இரவு 3 மணிக்கே சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., வழியாக எனக்கு தகவல் கூறினார். நாங்கள், 'தினமலர்' இதழில் சஸ்பெண்ட் செய்தி வந்தால் மட்டுமே நம்புவோம் என்றோம். அதிகாலை, 'தினமலர்' செய்தி வெளியிட்டது; உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஆயுதப் போலீசார் என் வீட்டில் முற்றுகையிட்டு முன் கதவை அடித்து நொறுக்கினர். பின் அவர்கள் வேகமாகத் 'தினமலர்' அலுவலகத்தைத் தாக்க, மார்ச் செய்தனர். நான் லைட்னிங் கால் மூலம் அருளைத் தொடர்பு கொண்டேன்.அவரோ 'போலீசார் . . . அதுவும் ஆயுதப் போலீசார், பத்திரிகை ஆபீசை நோக்கி படை எடுப்பதை இங்கிருந்து (சென்னையில்) எப்படி நான் நிறுத்துவேன் . . . நேரம் இல்லையே?' என்றார்.


latest tamil news


'தினமலர்' இதழுக்கு எச்சரிக்கைத் தர போன் செய்தேன். இராமசுப்பையரே போனை எடுத்தார். விஷயத்தின் தீவிரத்தைச் சொன்னேன். அப்போது அவர் சொன்னது, என்னை இன்றைக்கும் அதிரச் செய்தது. அவர் பதில் இதுதான் . . . 'கவலைப் படாதீர்கள் சண்முகம் . . . நாம் உண்மையைத்தான் சொன்னோம். கலவரங்கள் நடப்பது நமக்கு என்ன மகிழ்ச்சியா? உண்மையைச் சொன்னதற்காகத் தண்டிக்கப்படுவோமானால் ஏற்க வேண்டியதுதான். நடப்பது நடக்கட்டும். இப்போது அதற்காகக் கவலைப்பட வேண்டாம். பார்த்துக்கொள்கிறேன்' என்றார். பின்னர் நான் கேள்விப்பட்டது, அலுவலக ஊழியர்கள் அனைவரையுமே உடனே வெளியேற்றிவிட்டு, தான் மட்டும் ஆபீசினுள் தங்கியிருந்தார் என்பது! இதற்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும்.

இதற்குள் தகவல் ஆர்.டி.ஓ.,விற்குச் சென்றது. பழைய தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடுவின் மகன்தான் ஆர்.டி.ஓ., பெயர் இப்போது எனக்கு நினைவில்லை. அவர் உடனே ஜீப்பை எடுத்து, முருகன்குறிச்சியில் ஆயுதப் போலீசாரைத் தடுத்து, நல்ல வார்த்தைகள் சொல்லி, எப்படியோ திருப்பி அனுப்பி விட்டார். அன்றைக்குத் 'தினமலர்' காட்டிய துணிவுகளைப் பற்றி பின்னர் ஒரு தடவை டி.வி.ஆரிடம், 'இது எப்படி உங்களால் முடிந்தது?' என்று கேட்டேன். டி.வி.ஆர்.,சிரித்துக்கொண்டே, 'நாங்கள் திருவனந்த புரத்தில் பட்டம் தாணுப்பிள்ளையிடம் தினசரி இவற்றை அனுபவித்துப் பழகிவிட்டோம். உண்மை எப்போதும் நிலைக்கும்; நம்மைக் காப்பாற்றும் என்பது என் நம்பிக்கை' என்றார்.

வரலாற்றில் எழுதப்பட வேண்டிய இந்த திருநெல்வேலி கலவரம் பற்றி ஆராய யாராவது முன் வந்தால் 1972, 'தினமலர்' இதழ்களைத் தேடியே ஆக வேண்டும். ஆயுதப் போலீசார் அணிவகுத்து எதிர்த்து நின்ற போதும், துணிந்து தான் ஒருவராக அதை எதிர்கொள்ள நின்ற அந்த மனிதரின் உடல் இரும்பாலா செய்யப்பட்டிருந்தது . . . இது எனக்கு இன்றைக்கும் விடுபடாத புதிராக உள்ளது என்றார் சண்முகம்.
-எல்.முருகராஜ்.
நன்றி:கடல் தாமரை.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-202009:16:35 IST Report Abuse
நக்கல் அன்னாரை போன்ற பத்திரிகையாளர்கள் இன்று வெகு சிலரே.... பலர் விலை போய் விட்டனர்... தமிழ்நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற பல கேவலங்களுக்கு முக்கிய காரணம் தீகவும்,, தீயமுகவும்தான்... தினமலரின் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.. அதை தொடங்கிவைத்த தலைவருக்கு என் வணக்கங்களும், அஞ்சலியும்...
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
22-ஜூலை-202008:28:35 IST Report Abuse
மு. செந்தமிழன் படிக்கும்போதே ரெம்ப பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது, TVR அவர்கள் பற்றி முன்பே படித்துள்ளேன், தமிழக நலன் மீது சமூக அக்கறை உள்ளவராக இருந்துள்ளார், முக்கியமாக தென்தமிழகம் மீது TVR க்கு தனி பற்று இருந்துள்ளது, இன்றும் தினமலர் அந்த பணியை செய்கிறது மதுரைக்கு எய்ம்ஸ் வர தினமலரின் பங்கும் உள்ளது, மதுரைக்கு எய்ம்ஸ் வருவதில் சந்தேகம் இருந்த பொழுது மதுரையில் உள்ள அரசியல்வாதிகளை உண்டு இல்லை என ஒரு பிடிபிடித்து செய்தி வெளியிட்டது தினமலர். தினமலர் = ஆளும்கட்சியை பகைத்துக்கொள்வது
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
22-ஜூலை-202008:22:29 IST Report Abuse
GMM பிரசனைக்கு தீர்வு விரைவில் காணும் கருத்து சுதந்திரம் போராட்டம் இன்றி தீர்வு காணும் திறவுகோல். நேர்மையான கருத்துக்கள் நிறைந்தது தினமலர். பல கஷ்டங்களை சந்தித்து வழிகாட்டியவர் அமரர் டி வி ஆர். இது போன்ற பத்திரிக்கை நிலைக்க மக்கள் ஆதரவு வேண்டும். வீடுதோறும் தினமலர். தென் இந்திய மொழிகளில் வெளிவர வேண்டும்.BY கணேசன் எம் .எம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X